ஆன்மிகம்
குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி

குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2020-11-21 04:26 GMT   |   Update On 2020-11-21 04:26 GMT
குமரி மாவட்ட முருகன் கோவில்களில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. இந்த விழா ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் வெகுவிமரிசையாக நடைபெறும். இதன் உச்ச நிகழ்ச்சியாக சூரனை, முருகன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி முருக பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் கடைபிடித்தனர்.

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழாவின்போது ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் அபிஷேக அலங்காரம், பாராயண நிகழ்ச்சி, மதியம் 1 மணிக்கு வேல்வாங்க புறப்படுதல் போன்றவை நடந்தது. மாலை 4.45 மணியளவில் சுவாமி, சூரனை வதம் செய்ய புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக இந்த நிகழ்ச்சி கோவில் திடலை சுற்றியுள்ள ரதவீதிகளில் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவில் வளாகத்திற்குள்ளேயே முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி சூரனுடன் போரிடும் நிகழ்ச்சி நடந்தது. இறுதியாக 5.15 மணியளவில் கோவிலுக்கு வெளியே மெயின்ரோடு பகுதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. அப்போது முருகப்பெருமான், சூரனை வேலால் குத்தி வதம் செய்தார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் நாகராஜா கோவில் தெப்பக்குளத்தில் ஆறாட்டு விழா நடந்தது. அதன்பிறகு மாலை 5.40 மணிக்குப்பிறகு பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய நாகராஜா கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் குறைந்த அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே திரண்டிருந்தனர். அத்துடன் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை பாலமுருகன் சன்னதி அமைந்துள்ள மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமி சன்னதியில் கந்தசஷ்டி விழா நடந்தது. நேற்று மாலை 4.30 மணிக்கு கோவில் வளாகத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று முருகனை தரிசனம் செய்தனர். சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 5.55 மணிக்குப்பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இன்று மாலை 6 மணி முதல் 6.30 மணிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கன்னியாகுமரி தேரிவிளை குண்டலில் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழா வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள், இரவு அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்றவை நடக்கிறது. 6-ம் திருவிழாவான நேற்று சூரசம்ஹார விழா நடந்தது.

இதையொட்டி நேற்று காலையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலையில் கோவிலில் இருந்து பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முருகனும் மற்றொரு வாகனத்தில் சூரனும் எழுந்தருளி மேளதாளம் முழங்க பவனியாக புறப்பட்டனர். இந்த பவனி கோவிலில் இருந்து தொடங்கி ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு வழியாக முருகன்குன்றம் அடிவாரத்தை சென்றடைந்தது.

பின்னர் முருகன்குன்றம் அடிவாரத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் குறைந்த அளவு பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர். கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 10-ம் திருவிழாவான வருகிற 24- ந் தேதி இரவு 7 மணிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை சார்பில் வவ்வால் குகை பாலமுருகன்சாமி கோவிலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறையின் அடிப்படையில் சூரசம்ஹாரவிழா நடந்தது. இதையொட்டி மாலையில் சாமிக்கு அபிஷேகம் சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் தெருவில் சூரன் முன்னால் செல்ல, பாலமுருகன் பின்னால் விரட்டி சென்றார். இறுதியில் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் சூரனை பாலமுருகன்சாமி வதம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தோவாளை செக்கர் கிரி சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதையொட்டி வடக்கூர் கிருஷ்ணசாமி கோவில் மைதானம் முன்பு சூரன் முன்னால் செல்ல சுப்பிரமணியசாமி துரத்தி சென்றார். பின்னர் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் சூரனை சுப்பிரமணியசாமி வதம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

மருங்கூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று சூரசம்ஹார விழா நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் கோவில் வளாகத்திலேயே விழா நடந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதுபோல், தக்கலை அருகே குமாரகோவில் வேளிமலை குமாரசாமி கோவில், பத்மநாபபுரம் பாலசுப்பிரமணிய சாமி கோவில், வெள்ளிமலை பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நடந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்ததால் பெரும்பாலான கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி எளிமையான முறையில் நடந்தது.
Tags:    

Similar News