செய்திகள்
கோப்புபடம்

புதுச்சேரியில் 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2021-07-15 14:49 GMT   |   Update On 2021-07-15 14:49 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா குழந்தைகள் நல பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் கொரோனா 2-வது அலையின் பாதிப்புகள் குறைய தொடங்கிய சூழலில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.  இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

எனினும், கொரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி செலுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாக பின்பற்றாவிட்டால், 3-வது அலை வருவது சாத்தியம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  அதிலும், 3-வது அலை குழந்தைகளை அதிக அளவில் தாக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 21 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 5 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 4 குழந்தைகளும் அடங்குவர்.

இதேபோல, கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்மார்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பச்சிளம் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில், ஒரு குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை. மீதமுள்ள 4 குழந்தைகளுக்கு முடிவு தெரிய வேண்டியுள்ளது.



கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா குழந்தைகள் நல பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News