செய்திகள்
கைது செய்யப்பட்ட தமிழரசி, விக்னே‌‌ஷ், புண்ணியமூர்த்தி.

தஞ்சையில் வீடு புகுந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த 3 பேர் கைது

Published On 2021-01-21 11:27 GMT   |   Update On 2021-01-21 11:27 GMT
தஞ்சையில், வீடு புகுந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:

தஞ்சை மேலவஸ்தாசாவடி தன்ராஜ் ஊர்தியார் நகரை சேர்ந்தவர் பழனியம்மாள்(வயது 65). இவருடைய வீட்டுக்கு அருகில் இவரது மகள் வீடு உள்ளது. இவர், வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அந்த வீடு பூட்டிக்கிடந்தது.

இந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த டி.வி., பிரிட்ஜ், வா‌ஷிங் மெ‌ஷின், சிலிண்டர், ஏ.சி., அடுப்பு, மிக்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.

இது குறித்து பழனியம்மாள் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக்சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தமிழன், சந்திரசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், ஏட்டு இளவரசன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.. இந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மேலவஸ்தாசாவடி எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படையினர் அங்கு சென்று சோதனை செய்தபோது அந்த வீட்டில் இருந்த பொருட்கள், பழனியம்மாள் மகள் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த வீட்டில் இருந்த திருநீலபாண்டி மனைவி தமிழரசி (41), அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் விக்னே‌‌ஷ்(31), கருப்பு என்ற புண்ணியமூர்த்தி(21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்திய சரக்கு ஆட்டோ, ஒரு மோட்டார சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த கொள்ளை தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News