செய்திகள்

மதுரையில் 1½ மணி நேரம் மோடி பங்கேற்கும் விழா - விமானம் பறக்க தடை

Published On 2019-01-25 07:10 GMT   |   Update On 2019-01-25 07:43 GMT
மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா, பா.ஜனதா மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கும் சுமார் 1½ மணி நேரம் மைதானத்துக்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #PMModi #AIIMSinMadurai

மதுரை:

மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் பயன் அடையும் வகையில் ரூ.1300 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் மதுரை விமான நிலையம் வருகிறார். பகல் 11.20 மணிக்கு மதுரை வரும் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

பின்னர் காரில் விமான நிலையம் அருகே உள்ள மண்டேலாநகர் பகுதியில் நடைபெறும் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். 12 மணி வரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

 


 

பின்னர் 12.05 மணிக்கு பா.ஜனதா மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். 10 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் மத்தியில் தேர்தல் வியூகம் குறித்து மோடி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி 12.55 மணி வரை நடக்கிறது. பின்னர் விமான நிலையம் வரும் மோடி சிறப்பு விமானத்தில் கேரள மாநிலம் கொச்சி புறப்பட்டு செல்கிறார்.

மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய பாதுகாப்பு படை ஐ.ஜி. குப்தா தலைமையில் 8 பேர் கொண்ட பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். 2 நிகழ்ச்சிக்கு அருகருகே மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் வந்து செல்லும் பாதை, பார்வையாளர்கள் அனுமதிக்கும் பகுதி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

விழா மைதானம் விமான நிலையம் அருகே உள்ளது. எனவே மோடி பங்கேற்கும் சுமார் 1½ மணி நேரம் மைதானத்துக்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளையும் போலீசார் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை (சனிக்கிழமை) இரவு மதுரை வருகிறார்.

மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி தங்குகிறார். அவரை வரவேற்க அ.தி.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட கலெக்டர் நடராஜன், தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் நடராஜன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். #PMModi #AIIMSinMadurai

Tags:    

Similar News