ஆன்மிகம்
பால் ஊற்ற அனுமதி அளிக்கப்படாததால் நாகர்சிலைகள் இருக்கும் பகுதி வெறிச்சோடி இருப்பதை படத்தில் காணலாம்.

நாகராஜா கோவிலில் பக்தர்கள் சாமி சிலைகளுக்கு பால் ஊற்ற அனுமதி மறுப்பு

Published On 2020-09-07 04:23 GMT   |   Update On 2020-09-07 04:23 GMT
நாகராஜா கோவிலில் நாகராஜா சிலைகளுக்கு பால் ஊற்ற அனுமதி வழங்கப்படவில்லை. நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு பக்தர்கள் யாரும் செல்ல முடியாத படி தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த 5 மாதங்களாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு கடந்த 1-ந் தேதி முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பல மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் ஆர்வத்துடன் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் பல திருவிழாக்கள் நடந்தாலும் ஆவணி மாதங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மிகவும் விசே‌ஷமானதாகும்.

ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் நோய்கள், தோ‌ஷங்கள் நீங்கி குடும்பம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் ஆவணி மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலில் பக்தர்கள் திரண்டு வழிபடுவார்கள்.

கோவில் வளாகத்தில் உள்ள நாகராஜா சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் தூவியும் வழிபடுவார்கள். இதையொட்டி கோவிலிலும் சாமிக்கு சிறப்பு பூஜைகள், வாகன பவனி, புஷ்பாபிஷேகம், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் வந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

இன்று ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதனால் நாகராஜரை வழிபடுவதற்காக அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமியை வழிபட்டனர்.

கோவில் வாசலில் ஊழியர் ஒருவர் தெர்மல் ஸ்கேனருடன் நின்று பக்தர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தார். பின்னர் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி மருந்தும் கொடுக்கப்பட்டது. அதன்பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோவி லுக்கு சென்று வழிபட அனுமதிக் கப்பட்டனர்.

அதேசமயம் நாகராஜா சிலைகளுக்கு பால் ஊற்ற அனுமதி வழங்கப்படவில்லை. நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு பக்தர்கள் யாரும் செல்ல முடியாத படி தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது. இதையறியாத பக்தர்கள் பலர் கையில் பால், மஞ்சள் பாக்கெட்டுகளுடன் வந்திருந்தனர்.

பால் ஊற்ற அனுமதிக்கப் படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் கொண்டு வந்திருந்த பால் பாக்கெட்டுகளை அங்கேயே வைத்து விட்டுச் சென்றனர்.

இதுபற்றி பக்தர்கள் கூறும்போது நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றுவது காலம் காலமாக நடந்து வருகிறது. கோவில்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளதை போல சிலைகளுக்கு பால் ஊற்றவும் அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலின் வெளிப்புறத்தில் ஏராளமான தற்காலி கடைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று அங்கு எந்தவொரு கடைகளையும் காண முடியவில்லை. கோவிலின் வெளிப்புறம் வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News