ஆன்மிகம்
திருச்செங்கோடு சட்டையம்புதூர் அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா

அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-03-02 04:54 GMT   |   Update On 2021-03-02 04:54 GMT
திருச்செங்கோடு சட்டையம்புதூரில் உள்ள முக்கூட்டு விநாயகர், அழகு முத்துமாரியம்மன், அழகுமுத்துகுமாரசாமி கோவிலில் திருவிழா தொடங்கி நடைபெற்றது.
திருச்செங்கோடு சட்டையம்புதூரில் உள்ள முக்கூட்டு விநாயகர், அழகு முத்துமாரியம்மன், அழகுமுத்துகுமாரசாமி கோவிலில் திருவிழா தொடங்கி நடைபெற்றது. விழாவில் அழகுமுத்து மாரியம்மனுக்கும், முத்துக்குமாரசாமிக்கும் கம்பம், பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து முத்துக்குமாரசாமி படைக்கலம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஊர் நாட்டாண்மைக்காரர் படைக்கலம் எடுத்து பம்பை, மேளதாள, பறை இசைத்து ஊர் பொதுமக்களுடன் வலம் வந்து கோவிலை சென்றடைந்தது.

பின்னர் அழகுமுத்து மாரியம்மனுக்கும், முத்துக்குமாரசாமிக்கும் தேர்குத்துதல், அலகு குத்துதல், புலி வேடம், குறவன் குறத்தி வேடம், சாமிகள் வேடம் மற்றும் பல்வேறு வேடங்களுடன் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்தில் முதுகில் அலகு குத்தியும், தேர் இழுத்தும், தூக்குத்தேர் தூக்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவிலில், அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து முத்துமாரி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. வாணவேடிக்கையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி ஊர்வலம் நடந்தது. இறுதியில் மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டு தெப்பக்குளத்தில் முளைப்பாரி விடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுற்றது.
Tags:    

Similar News