செய்திகள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ள பகுதி

தமிழகத்தை நெருங்கும் புயல் சின்னம், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Published On 2020-11-23 07:42 GMT   |   Update On 2020-11-23 07:42 GMT
தமிழகத்தை நெருங்கும் புயல் சின்னம், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம், மலிவு விலையில் ஸ்புட்னிக் தடுப்பூசி உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

# சபரிமலை கோவிலில் உதயாஸ்தமன பூஜை வழிபாட்டுக்கு 2027-ம் ஆண்டு வரை முன்பதிவு முடிவடைந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

# டெல்லியில் எம்.பி.க்கள் வசிப்பதற்காக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

# இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 91.39 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களில் 85.62 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 4.43 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

# வங்கக்கடலில் நாளை உருவாக உள்ள நிவர் புயல், கடலோர மாவட்டங்களை தாக்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மீட்பு பணிகளுக்காக பேரிடர் மீட்புப் படையின் 6 குழுவினர் விரைந்துள்ளனர். எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

# நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயாராக உள்ளது என்று அமைச்சர் தங்கமணி கூறினார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

# திமுகவின் பிரச்சார பயணம் தடையை கடந்து தொடரும் என உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

# மருத்துவப்படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளான இன்று தரவரிசை பட்டியலில் 1 முதல் 361 வரையில் இருப்பவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

# ஜோ பைடன் நிச்சயமாக மிகவும் பலவீனமான அதிபராகவே இருப்பார் என சீன அரசின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். மேலும் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால் ராஜதந்திர ரீதியாக சீனாவுக்கு எதிராக ஏதாவது செய்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

# இங்கிலாந்தில் தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் டிசம்பர் 2-ந் தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக்கொள்ள அந்த அரசு முடிவெடுத்துள்ளது.

# அமெரிக்காவின் மாடர்னா மற்றும் பைசர் நிறுவன மருந்துகளை விட தங்கள் நிறுவன தடுப்பூசி விலை மலிவாக இருக்கும் என ஸ்புட்னிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

# உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டொமினிக் தீமை வீழ்த்தி டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

# இந்திய தடகள அணியின் திறன் இயக்குனர் ஜெர்மனியைச் சேர்ந்த வோல்கர் ஹெர்மான் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

# தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் தோல்வியைத் தழுவினார். டி.ராஜேந்தர் அணிக்கு துணைத் தலைவர் பதவியும் கிடைக்கவில்லை.
Tags:    

Similar News