உள்ளூர் செய்திகள்
லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து

பெருந்துறை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி பெண் பயணி பலி- 16 பேர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2022-05-06 11:48 GMT   |   Update On 2022-05-06 11:48 GMT
பெருந்துறை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பெண் பயணி சிகிச்சை பலனின்றி பலியானார். 16 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெருந்துறை:

பெங்களூரில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று இரவு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 25 பயணிகள் இருந்தனர்.

இதேபோல் சேலத்தில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி இரும்பு குழாய் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.

லாரி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள டீச்சர்ஸ் காலனி பிரிவு என்ற பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த ஆம்னி பஸ் லாரியை முந்தி செல்ல முயன்றது.

அப்போது எதிர்பாராத வகையில் ஆம்னி பஸ்சின் இடது புறம் லாரியின் பக்கவாட்டில் மோதி விபத்தானது. அதிகாலை நேரம் என்பதால் பஸ் பயணிகள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். விபத்து நடந்ததும் பயணிகள் அனைவரும் சத்தம் கேட்டு என்னமோ ஏதோ என்று நினைத்து கதறினர்.

லாரியின் வலது புறத்தில் பஸ் சொருகிக் கொண்டதால் பஸ்சில் இருந்து பயணிகள் இறங்க முடியவில்லை. இதையடுத்து பெருந்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த அங்கமுத்து என்பவரது மனைவி சரஸ்வதி (74) மற்றும் பாலசுப்பிரமணி (47), செல்வராஜ் (61), ராமமூர்த்தி (47), கிருஷ்ணன் (53), ரகுபதி (58), பவித்ரா (26), தேவ்சித்தார்த் (1லு), கிருஷ்ணவேணி (51), பெருமாள் (60), செல்லம்மாள் (56), பிரகாஷ் (54) உள்பட 17 பேர் காயமடைந்தனர்.

காயம் அடைந்த பயணிகள் 4 ஆம்புலன்ஸ்கள் மூலம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சரஸ்வதி (74) என்ற பெண் பயணி சிகிச்சை பலனின்றி அதிகாலை 5.30 மணி அளவில் இறந்தார். மேலும் பாலசுப்பிரமணி என்பவருக்கு 2 கால்களிலும் முறிவு ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து பற்றி தெரிய வந்ததும் பெருந்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக கோவை-சேலம் பைபாசில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News