செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அவ்வப்போது மறுஆய்வு செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு

Published On 2019-10-25 01:34 GMT   |   Update On 2019-10-25 01:34 GMT
காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அவ்வப்போது மறுஆய்வு செய்ய வேண்டும் என்று காஷ்மீர் மாநில நிர்வாகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, காஷ்மீரில், மக்கள் நடமாட்டத்துக்கும், தகவல் தொடர்பு சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 16-ந் தேதி, இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கட்டுப்பாடுகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தாக்கல் செய்யுமாறு காஷ்மீர் மாநில நிர்வாகத்தை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறுகையில், “தேசநலன் கருதி, காஷ்மீரில் நீங்கள் கட்டுப்பாடுகள் விதிக்கலாம். ஆனால் அவ்வப்போது அவற்றை மறுஆய்வு செய்ய வேண்டும்“ என்றனர்.

அதற்கு காஷ்மீர் மாநில நிர்வாகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அந்த கட்டுப்பாடுகள் தினந்தோறும் மறுஆய்வு செய்யப்படுகின்றன. 99 சதவீத பகுதிகளில் கட்டுப்பாடுகளே இல்லை“ என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், இணையதள சேவை மீதான கட்டுப்பாடு குறித்து கேட்டனர்.

சொலிசிட்டர் ஜெனரல் பதிலளிக்கையில், “எல்லைகளை கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இணையதள சேவை மீதான கட்டுப்பாடு தொடருகிறது“ என்று கூறினார்.

இதையடுத்து, மனு மீதான அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 5-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News