செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு

கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு

Published On 2019-08-13 08:02 GMT   |   Update On 2019-08-13 08:02 GMT
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், சண்முகவேல் மற்றும் அவரது மனைவியை கடையம் கல்யாணிபுரத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு இன்று நேரில் சென்று பாராட்டினார்.
நெல்லை:

கடையம் கல்யாணிபுரத்தில் சண்முகவேல் என்பவரது தோட்டத்து வீட்டில் நேற்று முன்தினம் இரவு மூகமுடி அணிந்த கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்த சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இழுத்து நிலைகுலைய செய்தார்.

அவரிடம் இருந்து தப்பிக்க சண்முகவேல் போராடினார். இதனை பார்த்த அவரது மனைவி செந்தாமரை வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையனின் மீது எடுத்து வீசினார். இதனால் கொள்ளையன் பிடியில் இருந்து சண்முகவேல் தப்பினார். இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அருகில் இருந்த பொருட்களை எடுத்து கொள்ளையர்கள் மீது வீசினர்.



மேலும் நாற்காலியை எடுத்து கொள்ளையர்களை தாக்கினர். கணவன்-மனைவியின் இந்த தொடர் தாக்குதலால் அரிவாள் வைத்திருந்த நிலையிலும் கொள்ளையர்களால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. தம்பதியின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாக்கவே கொள்ளையர்களால் முடிந்தது. இறுதியில் தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

சண்முகவேல் மற்றும் அவரது மனைவி கொள்ளையர்களை விரட்டியடிக்கும் காட்சி அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதனை பார்த்த பலரும் வயதான தம்பதியினரின் வீரத்தை பாராட்டினர்.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் சண்முகவேல் மற்றும் அவரது மனைவியை கடையம் கல்யாணிபுரத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு இன்று நேரில் சென்று பாராட்டினார். மேலும் நடந்த சம்பவங்களை கணவன்-மனைவியிடம் கேட்டறிந்தார்.

Tags:    

Similar News