உள்ளூர் செய்திகள்
மதுரை பூ மார்க்கெட்டில் இன்று குவிந்த மக்கள் கூட்டம்.

மதுரையில் மலர் சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு

Published On 2022-01-13 10:30 GMT   |   Update On 2022-01-13 10:30 GMT
மதுரை மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை பூ கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
மதுரை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் நாளை(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 

அதிகாலையிலேயே வீடுகளில் வண்ண கோலமிட்டு பானையில் புது அரிசி இட்டு பொங்கல் வைத்து குடும்பத்துடன் கொண்டாடும் தித்திப்பான பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். 

மதுரை மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் பொங்கல் விழா களை கட்டியுள்ளது. பொங்கல் பொருட்களை வாங்க யானைக்கல், நெல்பேட்டை, கீழமாசி வீதி, கீழமாரட் வீதி, விளக்குத்தூண், மேலமாசிவீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

மதுரை மலர் சந்தையில் பூக்கள் வரத்து இன்று மிகவும் குறைவாக காணப்பட்டது. நாளை பொங்கல் என்பதால் பூக்களை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

மல்லிகைப்பூ கிலோ ரூ.3ஆயிரத்திற்கும், பிச்சி மற்றும் முல்லை பூக்கள் ரூ.2ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன. கனகாம்பரம் 1,500 ரூபாய்க்கும், சென்னை மல்லிகை 1300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சராசரி நாட்களில் கிலோ 250 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படும் அரளிப்பூ  இன்று வரத்து குறைந்ததால் 1, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற மலர்களும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டன. இந்த விலை உயர்வினால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News