செய்திகள்
நியூசிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : நியூசிலாந்து அணி அறிவிப்பு

Published On 2021-06-15 20:48 GMT   |   Update On 2021-06-15 20:48 GMT
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் முழங்கை காயத்தில் சிக்கி தேறிவரும் வில்லியம்சன் இடம் பெற்றுள்ளார்.
சவுத்தம்டன்:

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இதற்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 20 பேர் கொண்ட நியூசிலாந்து அணி வீரர்கள் ஏற்கனவே இங்கிலாந்து சென்று 2 டெஸ்டில் விளையாடினர். அவர்களில் இருந்து 15 பேர் கொண்ட அதிகாரபூர்வ அணி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சுழற்பந்து வீ்ச்சாளர் இடத்திற்கு மிட்செல் சான்ட்னெரை பின்னுக்கு தள்ளிவிட்டு இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் இடம் பிடித்துள்ளார். டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி, டேரில் மிட்செல், ரச்சின் ரவிந்தரா ஆகியோர் கழற்றி விடப்பட்டனர்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முழங்கை காயத்தாலும், விக்கெட் கீப்பர் வாட்லிங் முதுகுவலியாலும் விளையாடவில்லை. அவர்கள் இருவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியில் நீடிக்கிறார்கள்.

இது குறித்து நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறுகையில், ‘வில்லியம்சன், வாட்லிங் இருவருக்கும் கிடைத்த இந்த ஒரு வார ஓய்வு மற்றும் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகள் நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்கும். இறுதிப்போட்டிக்குள் அவர்கள் உடல்தகுதியை எட்டி களம் இறங்க தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுவது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். இதில் பங்கேற்பதை அவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதை அறிவேன். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேலின் பந்து வீச்சு (20 ரன் மற்றும் 4 விக்கெட் எடுத்தார்) சிறப்பாக இருந்தது. அதனால் தான் அணிக்கு தேர்வாகியுள்ளார். சவுத்தம்டனிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று நம்புகிறோம்.’ என்றார்.

நியூசிலாந்து அணி வருமாறு:-

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிவான் கான்வே, டாம் லாதம், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வில் யங், வாட்லிங், டாம் பிளன்டெல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர், காலின் டி கிரான்ட்ஹோம், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், அஜாஸ் பட்டேல்.
Tags:    

Similar News