ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கூடலழகர், தல்லாகுளம் பெருமாள்

கூடலழகர், தல்லாகுளம் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

Published On 2020-10-05 03:52 GMT   |   Update On 2020-10-05 03:52 GMT
கூடலழகர், தல்லாகுளம் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறப்பு அலங்காரத்தில் வழித்துணைபெருமாள், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். எனவே அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தநிலையில் நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால் அனைத்து பெருமாள் கோவில்களிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் சாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வெளியே காத்திருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கு மேல் தான் சாமி தரிசனத்திற்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உடல் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தல்லாகுளம் பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கோவிலை சுற்றி, சுற்றி பக்தர்கள் வரிசையாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதே போன்று கூடலழகர் பெருமாள் கோவிலில் இருந்து பெரியார் பஸ்நிலையம் வரை பக்தர்கள் நீண்ட வரிசை இருந்தது. எனவே அங்கும் பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்திலும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக நேற்று அதிகமாக காணப்பட்டது.

மதுரை ஒத்தக்கடையை அடுத்த திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வழித்துணைபெருமாள், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Tags:    

Similar News