வழிபாடு
விருத்தகிரீஸ்வரர் கோவில்

விருத்தகிரீஸ்வரர் கோவிலின் ஐந்து என்ற எண் பெருமைகள்

Published On 2022-02-11 08:32 GMT   |   Update On 2022-02-11 08:32 GMT
சைவர்களுக்கு சிவாயநம என்கிற ஐந்தெழுத்து மிகவும் முக்கியமாகும். அதுபோல் ஐந்து என்ற எண் பெருமை இந்த கோவிலில் பல வகைகளிலும் வெளிப்படுகிறது.
சைவர்களுக்கு சிவாயநம என்கிற ஐந்தெழுத்து மிகவும் முக்கியமாகும். அதுபோல் ஐந்து என்ற எண் பெருமை இந்த கோவிலில் பல வகைகளிலும் வெளிப்படுகிறது.

அதன்படி 5 பிரகாரங்கள் ஆதி காலத்தில் இருந்தே உள்ளது. இதில் கி.பி. 18-ம் நூற்றாண்டில் முகம்மதியர்கள் ஆட்சியின் போது ஒரு பிரகாரம் பஞ்சவர்ண திருச்சுற்று அழிந்து போனதாக இங்குள்ள 28 ஆகமக்கோவில் தெலுங்கு கல்வெட்டு குறிப்பிடுகிறது. எனவே தற்போது தேரோடும் பிரகாரம், கைலாயபிரகாரம், வன்னியடி பிரகாரம், அறுபத்து மூவர் பிரகாரம் என நான்கு மட்டுமே இருக்கிறது. இந்த கோவிலை மலையாக பாவித்து, இன்றும் பவுர்ணமி நாளில் கிரிவலம் வரும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

ஐந்தெழுத்து உபதேசம்

இங்கு உயிர் நீத்தவர்களை இறைவன் பழமலைநாதர் தன் மடி மீது கிடத்தி ஐந்தெழுத்து உபதேசம் செய்ய, பெரிய நாயகி முந்தானையால் வீசி முக்தி அளிப்பதாக கந்த புரணாத்தில் கச்சியப்ப முனிவர் குறிப்பிட்டுள்ளார்.

5 கொடிமரங்கள்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கைலாய பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபம் அருகே ஒரு கொடிமரமும், வன்னி மர பிரகாரத்தில் 4 திசைகளிலும் 4 கொடிமரங்களும் அமைய பெற்றுள்ளது. மாசிமக பெருவிழாவின் போது இந்த 5 கொடி மரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்று, 10 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் பழமலை நாதரைப் பாடியதாக பாடல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் இத்திருக்கோவிலுக்கு வந்திருக்கிறார் என்று திருவாதவூரர் புராணத்தில் குறிப்புள்ளது.

சிவப்பிரகாச சுவாமிகள்

இவர் தொண்ட மண்டலத்தில் காஞ்சீபுரத்தில் அவதரித்தவர். 34 நூற்களை இயற்றிய பெருமை உடையவர். திருமுதுகுன்றத்திற்கு வந்து பழமலைநாதரையும், பெரியநாயகியையும் வழிபட்டு பழமலை அந்தாதி, பிட்சாடண நவமணிமாலை, கொச்சகக் கலிப்பா, பெரியநாயகிம்மை நெடுங்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம், பெரிய நாயகியம்மை கட்டளை கலித்துறை ஆகிய 5 நூற்களையும் படைத்துள்ளார்.

ஞானக்கூத்தர்

கி.பி. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பழமலைநாதர் மீது அளப்ரிய பற்றுக் கொண்டவர். பழமலைநாதர் வீற்றிருந்தருள் புரியும் இப்புண்ணிய பூமியில் மலம் நீர் கழிக்கக்கூடாது என ஊழின் எல்லைக்கு சென்று கடன்களை செய்தவர். அதனால் அவருக்கு சேப்பாக்கத்தில் காட்சி கொடுத்தார். இவர் தான் விருத்தாசலம் புராணத்தை 438 விருத்தப்பாக்களில் பாடியவர்.
Tags:    

Similar News