லைஃப்ஸ்டைல்
சந்தோஷங்களை பேரக்குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் தாத்தா, பாட்டி

சந்தோஷங்களை பேரக்குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் தாத்தா, பாட்டி

Published On 2021-04-29 08:31 GMT   |   Update On 2021-04-29 08:31 GMT
கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய சூழலில், தங்களது அனுபவங்களையும், உறவுகளையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி தலைமுறையின் தொடர்ச்சிகளை தக்க வைத்துக்கொள்ளும் பொறுப்பு தாத்தா, பாட்டிகளுக்கே உள்ளது.
பெரும்பாலான இளைய தலைமுறையினர் தற்போது கல்வி, பணி, சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் விருப்பத்திற்கேற்ற இடங்களுக்கு தங்கள் வாழ்க்கையை தேடிச் செல்கிறார்கள். சிலர் உணர்வுரீதியான பிணைப்புடன் ஊர் மற்றும் உறவுகளுக்கு மத்தியில் தங்களுக்கான வாழ்க்கை பயணத்தை தொடர்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் நகரம் மற்றும் கிராமம் ஆகிய இரு வேறுபட்ட வாழ்க்கை சூழலில் வீட்டில் உள்ள வயதான பெற்றோர்கள் மற்றும் மனைவி- குழந்தைகளுடன் வாழ்கிறார்கள். 30 முதல் 42 வயதுக்குள் உள்ள அவர்களை ‘சாண்ட்விச் தலைமுறையினர்’ என்று சமூக உளவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சமூக அளவில் வயதான பெற்றோர்கள் பல வகைகளில் இருக்கிறார்கள். அரசுப் பணி அல்லது தனியார் பணியிலிருந்து ஓய்வு பெற்று மாதாந்திர ஓய்வூதியம் பெறும் பெற்றோர்கள் ஒரு வகை. அமைப்பு சாரா தொழில்கள் செய்து ஒரு குறிப்பிட்ட வயதில் உடல் தளர்ந்து வேலை செய்ய முடியாமல் ஓய்வு பெற்றவர்கள் இன்னொரு வகை. விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்கள் முதுமை காரணமாக பிள்ளைகளுக்கு நிலத்தை கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்பவர்கள் மற்றொரு வகை.

இப்படிப்பட்ட பெற்றோர்களால் வளர்க்கப் பட்டவர்கள் படித்து, பணியிலோ அல்லது தொழிலிலோ அமர்ந்த பின்னர் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் நிலைக்கு வருகிறார்கள். அந்த நிலையில் வயதான பெற் றோர்களை கவனித்துக்கொள்வது, தங்கள் திருமண வாழ்க்கையை தொடர்வது ஆகிய இரு பொறுப்புகளையும் அவர்கள் ஒருசேர கவனிக்கவேண்டியதிருக்கிறது.

குடும்பத்தில் ஒரு பக்கம் வயதான பெற்றோர், இன்னொரு பக்கம் தனது மனைவி குழந்தைகள் என்று இரு தரப்பு எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது சாண்ட்விச் தலைமுறைக்கு சவாலான விஷயம். யாரை முதலில் கவனிப்பது, பெற்றோரை டாக்டரிடம் அழைத்துச் செல்வதா அல்லது குழந்தையின் பள்ளி ஆண்டு விழாவுக்கு செல்வதா என்பதில் ஆரம்பித்து இரு தலைமுறையின் மாறுபட்ட தேவைகளை நிறைவேற்றுவதில் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும்.

அதே நேரத்தில் வயதான காலத்திலும் பல பெற்றோர் தொழிலில் தங்கள் பிள்ளைகளுக்கு உதவும் வகையில் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அதேபோல வீட்டு வேலைகளையும், இதர பொறுப்புகளையும் பகிர்ந்துகொண்டு தம்மால் முடிந்தவரை குடும்பத்துக்கு உதவி வரும் பாட்டிகளும் பல ஊர்களில் இருக்கிறார்கள். எப்போதுமே குழந்தைகள், பெற்றோர், தாத்தா, பாட்டி போன்ற பலரும் ஒருங்கிணைந்து அமைந்துள்ள குடும்பம்தான் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனநிலையை இளைய தலைமுறைக்கு அளிக்கும். சின்னக் குழந்தைகள் பெற்றோர்களிடம் வெளிப்படுத்தாத எண்ணங்களை தாத்தா, பாட்டியிடம் எளிதாக வெளிக்காட்டுவார்கள். அப்படிப்பட்ட உணர்வு ரீதியான ஆதரவு குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. அதை அருமையாக ஒருங்கிணைக்கும் பொறுப்பு சாண்ட்விச் தலைமுறையினருக்கு இருக்கிறது.

ஒவ்வொருவரின் வாழ்விலும் குழந்தைப் பருவத்தில் முதன்மையான இடத்தை பெறுவது தாத்தா மற்றும் பாட்டியாகத்தான் இருப்பார்கள். பேரக்குழந்தைகளை சரியாக கவனிக்காத அவர்களது மகன் அல்லது மகள்களை கடிந்துகொள்வதுடன், குழந்தைகளை அரவணைத்து, பாசத்தை காட்டுவதும் வீட்டுப் பெரியவர்கள்தான். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய சூழலில், தங்களது அனுபவங்களையும், உறவுகளையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி தலைமுறையின் தொடர்ச்சிகளை தக்க வைத்துக்கொள்ளும் பொறுப்பு தாத்தா, பாட்டிகளுக்கே உள்ளது.

பெற்றோர்கள் மற்றும் அவர்கள் பேரக்குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை உறுதி செய்வது சாண்ட்விச் தலைமுறையினருக்கு அவசியமான ஒன்று. தூரம், காலம் போன்ற சிக்கல்கள் எல்லாம் இன்றைய தொழில்நுட்ப வசதிகள் முன் ஒன்றுமில்லாததாக ஆகி விட்டது. உலகம் உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. வீடியோ கால் மூலம் தாத்தா, பாட்டிகள் தங்கள் மேல்நாட்டு பேரன், பேத்திகளுடன் உரையாடுகிறார்கள். வாட்ஸ் அப் மூலம் உள்ளூர் செய்திகள் மற்றும் படங்களை தங்கள் பேரக்குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். எப்படியோ உணர்வுபூர்வமான கலாசார தொடர்புகள் அறுந்து விடாமல் இருப்பது மிக முக்கியம்.
Tags:    

Similar News