ஆன்மிகம்
தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு பக்தர்கள் காத்திருந்த காட்சி.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-01-13 02:53 GMT   |   Update On 2021-01-13 02:53 GMT
மார்கழி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. மார்கழி மாத அமாவாசையையொட்டி நேற்று இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

ஆதலால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, கோவை, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.

காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கைகளை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பின்னரே மலைப்பாதை வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள வழுக்குப்பாறை, சங்கிலிப்பாறை, கருப்பசாமி கோவில் ஓடை ஆகிய பகுதிகளில் நீராடிவிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.

காலை 8 மணிக்கு திடீரென மலைப்பகுதியில் பெய்த மழையால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மழை நின்ற உடன் காலை 8.30 மணிக்கு மீண்டும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் மலைப்பகுதியில் சாரல் மழையானது பெய்ய தொடங்கியது.

மழையானது தொடர்ந்து பெய்து வந்ததால் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டு பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வனத்துறை கேட் மூடப்பட்டது.

வனத்துறை கேட்டிற்கு முன்பு பக்தர்களின் வருகை அதிகரித்தது. 1 மணி நேரத்துக்கு மேலாக 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்து அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தொடர்ந்து மலைப்பகுதியில் பெய்த மழையால் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடை பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மார்கழி மாத அமாவாசையையொட்டி நேற்று மதியம் 12 மணிக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அமாவாசை சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் பூஜைக்கு பிறகு மலையில் இருந்து கீழே இறங்கி வந்தனர். தொடர்ந்து மலைப்பகுதியில் மழை பெய்வதால் பக்தர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News