வழிபாடு
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் முதல் தேரோட்டம்

முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் முதல் தேரோட்டம்

Published On 2022-04-06 04:49 GMT   |   Update On 2022-04-06 04:49 GMT
கன்னியாகுமரி முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவில் பங்குனி திருவிழாவையொட்டி தினமும் அய்யாவுக்குப் பணிவிடை, வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்ன தர்மங்கள் நடைபெற்று வருகின்றன.
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்ட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத 11 நாள் திருவிழா கடந்த 25-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் அய்யாவுக்குப் பணிவிடை, வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்ன தர்மங்கள் நடைபெற்று வருகின்றன. 11-ம் நாள் திருவிழாவான நேற்று பகல் 12 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத் தை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரைபாரதி, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன்,

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கவுன்சிலர்கள் அருண்காந்த், பிரேமலதா, மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகளிலும் வலம் வரச் செய்தனர். அய்யாவழி பக்தர்கள் தேரை இழுக்கும் போது சட்டை அணியாமல் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு நெற்றியில் நாமம் இட்டு “அய்யா அரகர சிவசிவ” என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி தேர் இழுத்தனர்.

மாலையில் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அதிகாலை திருக்கொடி இறக்குதலும் அதைத் தொடர்ந்து தான தர்மங்கள் நடைபெற்றது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி தர்மகர்த்தாக்கள் கே. மனோகரச் செல்வன், கே.எம். கைலாஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News