செய்திகள்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மினி கிளினிக்குகளில் செவிலியர்களை நியமிக்காமல் அ.தி.மு.க. சம்பளம் கொடுத்துள்ளது- அமைச்சர் குற்றச்சாட்டு

Published On 2021-10-07 09:11 GMT   |   Update On 2021-10-07 09:11 GMT
மருத்துவ துறைக்கு நிதி ஒதுக்கியதில் எவ்வித குறைபாடும் இல்லை என்றும் குறைபாடுகள் இருந்தால் நேரடியாக விவாதிக்க தயார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை:

நிதி நெருக்கடி காரணமாக எக்ஸ்ரே முடிவுகளை பேப்பரில் கொடுப்பதாக முன்னாள் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழக அரசு நிதி நெருக்கடியில் தள்ளாடுவதால் அரசு மருத்துவமனையில் பிலிம் நெகட்டிவ் பிரிண்ட் போட முடியாத நிலை இருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே முடிவுகளை பிலிம் நெகட்டிவ் மூலம் கொடுக்காததற்கு நிதிச்சுமை காரணமல்ல. டிஜிட்டல் உலகம் என்பதால் வாட்ஸ்அப் மூலம் சரியான முடிவுகள் மருத்துவர்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் கூட எக்ஸ்ரே முடிவுகளை பிலிம் ரோல்களில் வழங்குவதில்லை. தமிழக அரசை நிதிச்சுமையில் விட்டுச்சென்ற சென்ற முன்னாள் துணை முதல்-அமைச்சர் உண்மை தன்மை தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



சமூக வலைத்தளம் மற்றும் ஊடகத்தில் வரும் செய்திகளை மட்டும் நம்பி எந்தவித விவரங்களையும் அறியாமல் 10 ஆண்டு கால நிதிநிலை அறிக்கை சமர்பித்த ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டு இருப்பது தவறு. ஓ.பி.எஸ். நிதியமைச்சராக இருந்தபோது மருத்துவத்துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், தற்போதை திமுக ஆட்சியில் ரூ.18,933 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

கடந்த ஆட்சியை விட ரூ.487 கோடி மருத்துவ துறைக்கு நிதி குறைத்து ஒதுக்கியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஆனால் நிதியறிக்கை தலைப்பு வாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் எந்த தலைப்பின் கீழும் நிதி குறைக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.

மினி கிளினிக்குகளுக்கு கடந்த ஆட்சியில் ரூ.144 கோடி ஒதுக்கினீர்கள் என்றும் அதில் செவிலியர் சம்பளம் என்றும் கணக்கு காட்டினீர்கள். ஆனால் மினி கிளினிக்கில் செவிலியர் எங்கே? என்றும் இல்லாத செவிலியருக்கு எப்படி ஊதியம் கொடுத்தீர்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற அனைத்து குளறுபடிகளையும் சரி செய்து வருகிறோம். பிபிஇ கிட், முககவசம், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உணவு உள்ளிட்டவற்றில் கூடுதலாக செலவு செய்து குளறுபடி நடைபெற்றுள்ளதை வெளிக்கொண்டு வந்துள்ளோம். சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை வைத்து ஓ.பன்னீர்செல்வம் அரசு மருத்துவமனைகள் மீது குறை கூறுவது நாகரீகமாக இல்லை. மருத்துவ துறைக்கு நிதி ஒதுக்கியதில் எவ்வித குறைபாடும் இல்லை. குறைபாடுகள் இருந்தால் நேரடியாக விவாதிக்க தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News