உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2022-04-17 05:10 GMT   |   Update On 2022-04-17 05:10 GMT
வாகன நெரிசல் அதிகரித்துள்ள நிலையில் ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒரு கி.மீ. தூரத்தை கடப்பதற்கு அரைமணி நேரம் வரை ஆகிறது.
ஊட்டி:

ஊட்டியில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த 14-ந் தேதியில் இருந்தே ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலை, பச்சை பசேல் என காணப்படும் காடுகளின் இயற்கை அழகுகளை கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்து மகிழ்வதுடன், படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.

ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, நேரு பூங்கா, கொடநாடு காட்சிமுனை, லேம்ஸ்ராக், தாவரவியல் பூங்கா உள்பட மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களிலேயே வந்து செல்கின்றனர். இதன் காரணமாக அனைத்து சுற்றுலா மையங்களிலும் கடுமையான கூட்டம் காணப்படுவதுடன், மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வாகன நெரிசல் அதிகரித்துள்ள நிலையில் ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒரு கி.மீ. தூரத்தை கடப்பதற்கு அரைமணி நேரம் வரை ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

நேற்று ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு 19 ஆயிரம் பேரும், அரசினர் ரோஜா பூங்காவுக்கு 9 ஆயிரம் பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 6,000 பேரும், தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு 4,000 பேரும், ஊட்டி படகு இல்லத்துக்கு 10,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 6,000 பேரும் வந்திருந்தனர்.

Tags:    

Similar News