செய்திகள்
அமரிந்தர் சிங் மற்றும் அமித் ஷா

அமரிந்தர் சிங் மற்றும் அமித் ஷா சந்திப்பு - பகீர் தகவலுடன் வைரலாகும் புகைப்படம்

Published On 2021-09-24 05:21 GMT   |   Update On 2021-09-24 05:21 GMT
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.


முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறி புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் புகைப்படத்தில் அமரிந்தர் சிங் மற்றும் அமித் ஷா கை குலுக்குகின்றனர். அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவரை தொடர்ந்து சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக செப்டம்பர் 20 ஆம் தேதி பதவியேற்றார். 

இந்த நிலையில், 'அமரிந்தர் சிங் அமித் ஷாவை சந்தித்தார். விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்,' எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.



புகைப்படத்தை இணையத்தில் தேடிய போது, இந்த படம் ஜூன் 2019 ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்தது. இந்த புகைப்படம் அமரிந்தர் சிங் பஞ்சாப் முதல்வராக இருந்த போது உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த போது எடுக்கப்பட்டது ஆகும். சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமரிந்தர் சிங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

அந்த வகையில் தற்போது வைரலாகும் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. முன்னதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தான் இன்னமும் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாகவே பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் கூறினார். 
Tags:    

Similar News