செய்திகள்
கொரோனா சிறப்பு வார்டுகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா சிறப்பு வார்டுகள்

Published On 2021-04-08 05:54 GMT   |   Update On 2021-04-08 05:54 GMT
கொரோனா தொற்று பரவல் காரணமாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 18 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் தலா 50 பேர் வீதம் ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
திருச்சி:

தமிழகத்தில் பரவ தொடங்கி கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் உச்சம் தொட்ட கொரோனா தொற்று சுகாதாரத்துறையின் நடவடிக்கையால் படிப்படியாக குறைந்தது. முழு ஊரடங்கும் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

மேலும் கொரோனாவை மறந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததோடு, முகக்கவசம் அணிவதில் இருந்து முற்றிலும் விலகினர். தற்போது கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது.

மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற வதந்தி கொரோனாவை விட மக்களிடம் வேகமாக பரவுகிறது. இதற்கிடையே தேர்தல் முடிந்த கையோடு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி அரசு மருத்துவமனையில் மூடப்பட்ட கொரோனா சிறப்பு வார்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக 450 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொற்று பரவல் காரணமாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 18 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் தலா 50 பேர் வீதம் ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

நடமாடும் மருத்துவ குழுவினரும் பரிசோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் வரை இந்த பரிசோதனைக்கு 50 பேர் வரை வந்த நிலையில் தற்போது சராசரியாக 250 பேர் வரை வரத்தொடங்கி உள்ளனர். அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தில் நேற்று வரை கொரோனா நோயாளிகள் 200 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் 60 சதவீதம் படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டு அதுவும் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து வெளியில் சென்று வர வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News