லைஃப்ஸ்டைல்
கர்ப்ப கால உணவுமுறை

கர்ப்பிணிகளே முதல் மூணு மாசத்துல இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க...

Published On 2021-01-21 04:26 GMT   |   Update On 2021-01-21 04:26 GMT
முதல் மூணு மாசத்தில் சரியான உணவு மூலமே கர்ப்பிணிகள் தங்களையும் வயிற்றில் இருக்கும் கருவையும் பாதுகாக்க முடியும். இந்த முக்கிய காலங்களில் கண்டிப்பாக சேர்க்கவேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
ஒரு பெண் கர்ப்பமான முதல் மூன்று மாதம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த மாதங்களில் தான் பெரும்பாலும் கருச்சிதைவு உண்டாகிறது. அதே போல் இந்த மாதங்களில் தான் கருவின் வளர்ச்சியும் அதிகரிக்க செய்கிறது. கருவின் வளர்ச்சியில் அடித்தளமான இந்த காலம் கர்ப்பிணிகள் தங்களை வலிமையோடு வைத்திருக்க வேண்டிய காலமும் கூட.

இப்போது உடலுக்கு ஆற்றலும் அதிக ஊட்டச்சத்தும் நிறைவாக தேவை. இந்த நேரத்தில் சரியான உணவு மூலமே கர்ப்பிணிகள் தங்களையும் வயிற்றில் இருக்கும் கருவையும் பாதுகாக்க முடியும். இந்த முக்கிய காலங்களில் கண்டிப்பாக சேர்க்கவேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

​கீரைகள்

வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவருக்குமே இது மிகவும் தேவையானது. அதிலும் கருவை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு அதிகம் தேவை. கீரைகள் வைட்டமின் பி என்னும் ஃபோலிக் அமிலம் நிறைந்தவை. ஒரு பெண் கருவுற்றதை உறுதி செய்ததும் உணவில் சேர்க்க வேண்டிய முதல் பொருள் கீரையாகத்தான இருக்க வேண்டும். கீரையில் நிறைவாக இருக்கும் ஃபோலிக் அமிலமானது கருவின் மூளை மற்றும் முதுகெலும்பு தொடர்பான நரம்புக் குழாய் குறைபாடுகள் அல்லது கருவின் பிறப்பு குறைபாடுகளை தடுக்கிறது. தினம் ஒரு கீரையாக முருங்கைக்கீரை, பாலக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி என்று வகைவகையாக எடுத்துகொள்ளுங்கள். ஒரு கப் அளவு போதுமானது. கீரையை சூப் ஆக்கியும் எடுத்துகொள்ளலாம். மிளகு சேர்ப்பதால் குமட்டல் உணர்வும் சற்று குறையகூடும்.

​சிட்ரஸ் பழங்கள்

இதை சொல்லிதான் எடுக்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் கர்ப்பிணி குமட்டலை தடுக்க சிட்ரஸ் பழங்களை தான் விரும்புகிறார்கள். சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி கொண்டவை. தினமும் ஒவ்வொரு நாளும் 1 சிட்ரஸ் பழத்தை எடுத்துகொள்ளுங்கள். இதைசாறாக்கி குடிக்க விரும்பினால் தினம் 1 கப் அளவு எடுக்க வேண்டும். ஏனெனில் சாறுகளில் கலோரிகள் அதிகம், நார்ச்சத்து குறைவு என்பதால் அளவை அதிகரிக்க வேண்டாம். எலுமிச்சை பழம், ஆரஞ்சு,நெல்லிக்காய் போன்றவை எடுத்துகொள்ளலாம். இது வைட்டமின் சி நிறைந்தது என்பதால் எதிர்ப்பு சக்தியும் உடலில் அதிகரிக்க கூடும்.

கொட்டைகள்

நட்ஸ் வகைகள் கர்ப்பகாலம் முழுமையுமே தேவை. அளவாக இதை எடுத்துகொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யலாம். கருவுற்ற முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிக்கு புரதம் அவசியம். ஒவ்வொரு நாளும் 60 கிராம் அல்லது அதற்கு மேல் புரதம் தேவை என்று அறிவுறுத்தப்படுகிறது. அக்ரூட், பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டைகளில் ஆரோக்கியமான அளவு நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் புரதங்கள் உள்ளது. கர்ப்பிணிகள் கொட்டையை சாப்பிடுவதன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஒவ்வாமையை தடுக்க உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

​தயிர்


கர்ப்பிணிகள் தயிர், மோர் சாப்பிட்டால் குளுமை வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் தயிர் கால்சியத்தின் சிறந்த ஆதாரம். கர்ப்பிணிக்கு கால்சியம் குறைபாடு இருக்கும் போது வயிற்றில் வளரும் கருவுக்கு கால்சியம் தேவை என்னும் போது அது கர்ப்பீயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சப்படுகிறது. தினம் ஒரு கப் தயிர் சேர்ப்பதன் மூலம் கருவின் எலும்புகள் வலுவாக வைத்திருக்க முடியும். குழந்தை வளர வளர குழந்தைக்கு வேண்டிய கால்சியம் பற்றாக்குறையில்லாமல் கிடைக்கும். உறுதியான எலும்புகளோடு குழந்தை வளர கருவுற்ற தொடக்கத்தில் ஒரு கப் தயிர் அவசியம் எடுத்துகொள்ளுங்கள்.

​பீன்ஸ் வகைகள்

கர்ப்பிணி முதல் மற்றும் மூன்றாம் ட்ரை மெஸ்டர் காலங்களில் அதிகமாக மலச்சிக்கலை சந்திக்கிறார்கள். இந்த காலங்களில் அவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்வதன் மூலம் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. நார்ச்சத்து உணவில் பீன்ஸ் சிறந்த தேர்வு. இது கர்ப்பிணிக்கு தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்து வழங்குவதோடு மலச்சிக்கலையும் வராமல் செய்கிறது. பீன்ஸ் வகைகள் குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க செய்யும். கர்ப்பிணிக்கு மலச்சிக்கல் கவனிக்காத போது அது மூலநோய் வரை உண்டாக்கிவிடும். மேலும் மலக்குடல் பகுதியில் இருக்கும் நரம்புகள் வீங்குவதால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்க செய்யும். அதனால் உணவில் ஒரு வேளை பீன்ஸ் வகைகளை சேர்ப்பது நல்லது.

​முட்டை

கர்ப்பிணி அசைவப்பிரியராக இருந்தால் முட்டையை அவ்வபோது உணவில் சேர்க்க வேண்டும். முட்டை கர்ப்பிணிக்கு வேண்டிய புரத அளவை பூர்த்தி செய்கிறது. இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியமும் உள்ளது. இதனால் குழந்தையின் எலும்புகள் உறுதியாக வைத்திருக்க உதவும். கருவுற்ற காலத்தில் எல்லா உணவுகளுமே ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரம் சில உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி சேர்ப்பது மேலும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
Tags:    

Similar News