ஆன்மிகம்
காவடி பழனியாண்டவர்

காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா 28-ந்தேதி நடக்கிறது

Published On 2021-03-26 08:51 GMT   |   Update On 2021-03-26 08:51 GMT
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேர்த்திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை வருதல், வள்ளி தேவசேனா சமேத காவடி பழனியாண்டவருக்கு திருக்கல்யாண உற்சவம், மஞ்சள் இடித்தல், மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதல், மகா தீபாராதனை நடைபெறும்.

திருமணம் ஆகாத ஆண், பெண் பக்தர்கள் இந்த திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டால் திருமணம் நடைபெறும். நாளை (சனிக்கிழமை) வள்ளி தேவசேனா காவடி பழனியாண்டவருக்கு பக்தர்கள் கையினால் அரைத்த சந்தன சாந்தில் அத்தர், அரகசா, ஜவ்வாது போன்றவை கலந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படும். பக்தர்கள் யார் வேண்டுமானாலும் கோவிலில் அமைந்துள்ள சந்தனக்கல்லில் சந்தனம் அரைத்து தந்தால் அவர்கள் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது நம்பிக்கை ஆகும்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக, பங்குனி உத்திர தேரோட்டம் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று காலை காவடி பழனியாண்டவருக்கு சுவர்ணமுருகன் அலங்காரம், தங்க சாத்துப்படி நடைபெறும். காலை 5 மணிக்கு கோமாதா பூஜை, சிறப்பு அபிஷேகம், ஹோமம், பூஜை, தீபாராதனை, காவடிகள் புறப்பாடு, அருள்வாக்கு நடைபெறும். காலை 11 மணிக்கு திருப்புகழ் பஜனையும், மதியம் 1 மணிக்கு 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெறும். தொடர்ந்து நாட்டிய நடன நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறும்.

மாலை 5 மணிக்கு 1,008 பால்குட ஊர்வலம் நடைபெறும். இதில் பங்கேற்கும் பக்தர்கள் அவரவர் கைப்பட காவடி பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்வார்கள். மாலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சினிமா மெல்லிசை கச்சேரி நடக்கிறது. நிறைவாக இரவு 7 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. மேலும் ஒரு ஆண்டுக்கு முன்பு செய்த அபூர்வ பஞ்சாமிர்தம் சன்னதியில் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் எஸ்.சோமசுந்தரம், எஸ்.செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News