செய்திகள்
தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் கூட்டத்தை படத்தில் காணலாம்

கடையநல்லூர் அருகே இன்று அதிகாலை விவசாய நிலங்களில் புகுந்த யானை கூட்டம்

Published On 2021-09-15 10:18 GMT   |   Update On 2021-09-15 10:18 GMT
கடையநல்லூர் அருகே வனத்துறையினர் குழு அமைத்து யானைகளை விரட்டுவதும், பின்னர் அவை வேறு வழியாக திரும்ப வந்து விளை நிலங்களை நாசப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகின்றன.

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகா மேக்கரை, வடகரை, அச்சன்புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்கள் கடையநல்லூர் வனசரகத்துக்குட்பட்ட ராயன்காடு, குறவன்பாறை, மூணுசெல்லி, சென்னாபத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளது.

இந்த நிலங்களில் மா, வாழை, தென்னை, நெல்லி, அண்டி, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.இங்குள்ளோருக்கு விவசாயமே பிரதான தொழிலாகும்.

இத்தொழிலை நம்பியே ஏராளமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மிளா போன்ற வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

வனத்துறையினர் குழு அமைத்து யானைகளை விரட்டுவதும், பின்னர் அவை வேறு வழியாக திரும்ப வந்து விளை நிலங்களை நாசப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகின்றன.

கடந்த மாதம் 7-ந் தேதி வடகரை பகுதி பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் ரகுமானியாபுரத்தையொட்டி உள்ள தோட்டங்கள் மற்றும் அடவிநயினார் நீர்தேக்கம் ஒட்டிய மேட்டுக்கால் உச்சாண்அடையில் உள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அங்கிருந்த தென்னை மரங்களை வேரோடு சாய்த்தும், வாழைமரங்களை நாசம் செய்து பிடுங்கி சேதப்படுத்தியது.

இந்நிலையில் ரகுமானியாபுரம் குடியிருப்பு அருகே இன்று அதிகாலை 4 யானைகள் புகுந்தது.

இதைப்பார்த்த பால் வியாபாரி துரை என்பவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கடையநல்லூர் வனசரகர் சுரேஷ் உத்திரவின்படி வனவர் அம்பலவாணர் தலையில் 15 பேர் கொண்ட 2 குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் வனத்தையொட்டி பகுதிக்குள் வந்த யானை கூட்டத்தை விரட்டியடிக்க பட்டாசுகள் வெடித்தும், மத்தளம், அதிக ஓசை தரும் தட்டுகள் மற்றும் யானைகளுக்கு கண்கூசும் அளவில் உள்ள மின் விளக்கு உள்ளிட்டவற்றை கொண்டு விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபாடு வருகின்றனர்.

இது குறித்து வனசரகர் சுரேஷ் கூறும்போது, யானை கூட்டம் ஊருக்கு அருகாமையில் குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளதாக அறிந்த நிலையில் 18 பேர் அடங்கிய குழு முலம் யானை கூட்டத்தை விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. விரைவில் வனத்துக்குள் விரட்டியடிக்க படும் என தெரிவித்தார்.

யானை கூட்டத்தை காண பொதுமக்கள் வீடியோ எடுக்க செல்ல வேண்டாம். யானை தங்களை தாக்க கூடும் என்பதால் யாரும் அந்த பகுதிக்குள் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News