செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

அடுத்த 3 வாரங்களுக்கு மிக, மிக உஷாராக இருங்கள்- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Published On 2021-04-21 08:01 GMT   |   Update On 2021-04-21 08:01 GMT
அனைத்து மாநிலங்களிலும் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி:

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 7 யூனியன் பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.

இதில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் மற்றும் நிதி அயோக், உறுப்பினர் வி.கே.பால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்கவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள நிலைமைகளை கேட்டறிந்தனர். அடுத்த 3 வாரத்திற்கு நோய் பரவல் இன்னும் வேகம் எடுக்கலாம். எனவே அனைத்து மாநிலங்களும் மிக, மிக உஷாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கேட்டுக்கொண்டனர்.

அனைத்து மாநிலங்களிலும் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். எந்த சூழலையும் எதிர்க்கொள்ளும் அளவுக்கு தயாராக இருங்கள் என்று கூறினார்கள்.


சமீபகாலமாக லடாக், காஷ்மீர், லட்சத்தீவு போன்ற மாநிலங்களில் நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றன. எனவே அங்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

டெல்லி, சண்டிகர் பகுதிகளில் ஏற்கனவே நோய் தொற்று மோசமான நிலையில் இருக்கிறது. அங்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதம் நடத்தினார்கள். கொரோனா பரவல் உச்சத்தை தொடும் நேரம் வந்துவிட்டது.

எனவே எதிலும் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்று மாநில அதிகாரிகளை மத்திய அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News