ஆன்மிகம்
வேளாங்கண்ணி பேராலயம் திறந்ததையொட்டி பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வழிபட சென்றதை படத்தில் காணலாம்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி உள்ளூர் பக்தர்கள் வழிபாடு

Published On 2020-09-03 05:06 GMT   |   Update On 2020-09-03 05:06 GMT
5 மாதங்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி உள்ளூர் பக்தர்கள் பேராலயத்திற்குள் சென்று வழிபாடு செய்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்து உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளையொட்டி 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். இந்த திருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை நடைபெறும்.

இதில் பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவர். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் வேளாங்கண்ணி பேராலயம் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது.

இந்த நிலையில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையொட்டி பக்தர்கள் வழிபடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் வேளாங் கண்ணி பேராலயத்தில் மேற்கொள்ளப்பட்டது. சமூக இடைவெளி, முககவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழி முறைகளை பின்பற்றுவதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த பணிகள் அனைத்தும் வேளாங் கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் நடந்தது.

ஆனால் வேளாங்கண்ணி பேராலயம் நேற்று முன்தினம் திறக்கப்படவில்லை. பேராலய ஆண்டு திருவிழாவில் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மாவட்ட கலெக்டர் அறிவித்தார். இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் நேற்று திறக்கப்பட்டது. அன்னையை தரிசனம் செய்வதற்கு வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 8 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரையில் பேராலயத்தின் உள்ளே சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நேற்று காலை 8 மணிக்கு முக கவசம் அணிந்தும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே பேராலயத்திற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சமூக இடைவெளியை பின்பற்றி ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
Tags:    

Similar News