ஆன்மிகம்
மரத்தடி மாரியம்மன், கோவில் தோற்றம்

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்தடி மாரியம்மன் கோவில்

Published On 2020-10-07 01:28 GMT   |   Update On 2020-10-07 01:28 GMT
கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்தடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் பிரசித்திபெற்ற மரத்தடி மாரியம்மன் கோவில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் வடக்கு திசை நோக்கி மாரியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலின் தலவிருட்சம் ஆலமரம் ஆகும்.

குழந்தைப்பேறு

வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மரத்தடி மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் மாலை நேரங்களில் அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு தீபாராதனை காண்பிக்கப்படும்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள் மரத்தடி மாரியம்மனை மனமுருகி வழிபட்டால் அவர்களது நோய் தீருவதாக கூறப்படுகிறது. மேலும், குழந் தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை போன்ற சிறு உருவபொம்மையை செய்து வைத்து அம்மனை வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேலும், தங்களது நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் விதமாக பக்தர்கள் பொங்கல் வைத்து மரத்தடி மாரியம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

தல வரலாறு

சின்னவேடம்பட்டி கிராம மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்தக் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக அம்மனிடம் உத்தரவு கேட்கும்போது, அங்கு அருளாடிய ஒருவர் “நான் சின்னவேடம்பட்டி கிராமத்தில் தென்மேற்கு திசையில் உள்ள ஒரு ஆலமரத்தில் குடிகொண்டிருக்கிறேன்” என்று அருள்வாக்கு கூறியதால் அன்றுதொட்டு கிராம மக்கள் அனைவரும் ஆலமரத்தடியில் விளக்கேற்றி அம்மனை பயபக்தியுடன் வணங்கி வந்தனர்.

நாளடைவில் இப்பகுதியில் அம்மனுக்கு கோவில் அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி மரத்தடியில் தென்னை ஓலை பந்தல் அமைத்து அம்மனை வழிபட்டனர். தற்போது ஒரு சிறிய கோவிலை கட்டி வழிபட்டு வருகின்றனர். மரத்தடி மாரியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவிழா

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனிடம் உத்தரவு கேட்டபிறகே சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அன்று திருவிழா நடத்தப்படுகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மரத்தடி மாரியம்மனுக்கு நாள் தோறும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 11-ம் நாள் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெறும். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சியான வேண்டுதல் தேர் இழுக்கும் நிகழ்ச்சி 15-ம் நாளில் நடைபெறும். அப்போது பக்தர்கள் சக்தி கரகம் மற்றும் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இந்த விழாவில் சின்னவேடம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து செல்வார்கள்.
Tags:    

Similar News