செய்திகள்
அமைச்சர் கேஎன் நேரு

உள்ளாட்சி தேர்தல் எப்போது?- அமைச்சர் கே.என்.நேரு பதில்

Published On 2021-07-24 06:23 GMT   |   Update On 2021-07-24 07:37 GMT
தூத்துக்குடி பழைய பஸ்நிலைய கட்டுமான பணிகள் வருகிற மார்ச் மாதத்தில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு இன்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் உள்ள சி.வ. குளத்தை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை அமைச்சர் நேரு பார்வையிட்டார்.

தொடர்ந்து பாளையங்கோட்டை சாலையில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து வருகிறேன். மழைக்காலம் விரைவில் வர உள்ளதால் அதற்கு முன்னதாக ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முடிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும். தூத்துக்குடி பழைய பஸ்நிலைய கட்டுமான பணிகள் வருகிற மார்ச் மாதத்தில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் உள்ளது. அதனை 3 மாதத்தில் முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Tags:    

Similar News