செய்திகள்
கோப்புபடம்

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பாலாறு - நல்லாற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Published On 2021-09-14 04:57 GMT   |   Update On 2021-09-14 04:57 GMT
ஆற்றில் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாத்து வந்த நீரோட்ட பகுதியில் தேங்கியிருந்த மணலும் முற்றிலுமாக அள்ளப்பட்டு விட்டது.
உடுமலை;

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி மேற்கு நோக்கி பாயும் பல சிற்றாறுகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசன ஆதாரமாக உள்ளது. 

குறிப்பாக திருமூர்த்தி மலையில் இருந்து பொன்னாலம்மன் சோலை, ஜிலோபநாயக்கன்பாளையம் உட்பட பல கிராமங்கள் வழியாக செல்லும் பாலாறு, குருமலை பகுதியில் இருந்து உருவாகி தேவனூர்புதூர் அருகே பாலாற்றுடன் இணையும் நல்லாறு ஆகியவை அப்பகுதியின் முக்கிய நீராதாரங்கள் ஆகும்.

இந்த இரு ஆறுகளும் தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கி காணாமல் போய் வருகின்றன. ஆற்றில் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாத்து வந்த நீரோட்ட பகுதியில் தேங்கியிருந்த மணலும் முற்றிலுமாக அள்ளப்பட்டுவிட்டது.

மழைக்காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் முழுமையாக இந்த சிற்றாறுகளை எட்டாத வகையில் ஆறுகளின் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு  நீரோட்டம் தடைபடுகிறது.

இரு ஆறுகளின் கரைகளில் துவங்கி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம் வரை நீண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பாலாறு மற்றும் நல்லாற்றை மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சிற்றாறுகளை மீட்பதற்கான முக்கிய பொறுப்பு பொதுப்பணித்துறையிடமே உள்ளது. எனவே பாலாறு மற்றும் நல்லாற்றில் ஆக்கிரமிப்புகளை மீட்க முதற்கட்டமாக அளவீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

இத்தகைய பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கீடு கிடைக்காத நிலையில் தன்னார்வ அமைப்புகள், விவசாய சங்கங்கள் மற்றும் கிராமமக்கள் பங்களிப்பையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெறலாம். 

வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் சிற்றாறுகளை மீட்பதற்கான சிறிய முயற்சிகளையாவது பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அதேபோல் ஊராட்சி வாயிலாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை கொண்டு சிற்றாறுகளில் குறைந்தளவு தண்ணீர் தேங்கும் பகுதியில் ஆக்கிரமித்துள்ள செடிகளை மட்டுமாவது அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
Tags:    

Similar News