குழந்தை பராமரிப்பு
குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சி

குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு 5 கலை சிகிச்சைகள்

Published On 2021-12-03 07:18 GMT   |   Update On 2021-12-03 07:18 GMT
ஆக்கப்பூர்வமான விஷயங்களில் குழந்தைகளுக்கு கலை ஆர்வத்தை புகுத்துவதன் மூலம் அவர்களின் தனித்திறன்களையும், புரிந்துகொள்ளும் திறனையும் வளர்த்தெடுக்கலாம்.
குழந்தைகளை அறிவாற்றலில் சிறந்தவர்களாகவும், புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வதற்கான தேடலை தொடர்பவர்களாகவும் ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோரிடம் இருக்கிறது. அவர்கள் எந்தெந்த விஷயங்களை செய்வதற்கு கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்களோ, அதில் ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது. வளரும் குழந்தைகளிடத்தில் இயல்பாகவே கலை ஆர்வம் மிகுந்திருக்கும். சுவரில் கிறுக்கலில் ஆரம்பித்து சித்திரம் வரைவது வரை அவர்களிடத்தில் கலை ரசனை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆக்கப்பூர்வமான விஷயங்களில் அத்தகைய கலை ஆர்வத்தை புகுத்துவதன் மூலம் அவர்களின் தனித்திறன்களையும், புரிந்துகொள்ளும் திறனையும் வளர்த்தெடுக்கலாம். அதற்கு வழிகாட்டும் `ஐந்து கலை' சிகிச்சைகள் பற்றி பார்ப்போம்.

களிமண் சிற்பங்கள்: களி மண்ணை கொண்டு ஏதாவதொரு உருவம் செய்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் எளிமையான பயிற்சிகளை குழந்தைகளுக்கு வழங்கலாம். அவர்களுடன் அமர்ந்து சிறு சிறு உருவங்களை தயார் செய்து கொடுத்தாலே போதும்.

பின்பு தங்களுக்கு பிடித்தமான உருவங்களை ஆர்வமாக தயார் செய்வதற்கு பழகிவிடுவார்கள். களிமண்ணில் உருவங்கள், சிற்பங்கள் தயார் செய்வது நிதானத்தை கற்றுக்கொடுக்கும். மனதை அமைதியாக வைத்திருக்கவும் உதவும். சிறந்த பொழுதுபோக்காகவும் அமையும்.

காகித கலை: காகிதங்களை மடித்து பல்வேறு வடிவங்களை தயார் செய்யும் ‘ஓரிகமி’ கலை ஜப்பானில் பிரபலமானதாகும். இதில், ஒரு காகிதத்தை மடிப்பதன் மூலம் பல்வேறு வடிவங்கள் மற்றும் உயிரினங்களை உருவாக்க முடியும்.

காகிதத்தை முன்னும், பின்னும் மடிப்பதன் மூலம் எளிய முறையில் கலை படைப்புகளை தயாரித்துவிடலாம். இதனை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச் சூழலை பாதிக்காத பொருட்களை தயார் செய்துவிடலாம்.

ஓவியம் வரைதல்: குழந்தைகளிடத்தில் கலை ஆர்வத்தை வளர்த்தெடுக்க உதவும் சிறந்த பயிற்சிகளுள் ஒன்றாக இது அமைந்திருக்கிறது. குழந்தையின் கையில் பேனா, பென்சில் கிடைத்துவிட்டால் போதும். உடனே சுவரில் தங்கள் கை வண்ணத்தை காட்டி விடுவார்கள். வண்ணமயமான நிறங்கள் குழந்தைகளை வெகுவாக கவரும். அதனை கொண்டு தூரிைககளில் தங்கள் சிந்தனை திறனை மெருகேற்றிவிடுவார்கள்.

வெறுமனே கிறுக்கல்களுக்கு இடம் கொடுக்காமல் அழகாக ஓவியம் தீட்டுவதற்கு ஆரம்ப காலகட்டத் திலேயே பயிற்சி கொடுக்க வேண்டும். பார்க்கும் விஷயங்களில் பிடித்தமானவற்றை ஓவியமாக வரைவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். அது விரல்களுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமையும்.

நடனம்: குழந்தையின் உடல் ஆற்றலை சரியான வகையில் கையாளுவதற்கான சிறந்த வழிமுறையாக நடனம் அமைந்திருக்கிறது. இந்த பயிற்சி குழந்தைகளுக்கு தேவையான உடற்பயிற்சியை வழங்கக்கூடியது. அதனால் உடற்பயிற்சி மீது நாட்டம் இல்லாத குழந்தைகளை நடன பயிற்சிக்கு பழக்கிவிடலாம். இது தனித்திறன்களை வளர்த்தெடுக்கவும் உதவும்.

இசை: மனதிற்கு இதமும், இனிமையும் அளிக்கும் இசையை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. ‘குழந்தையின் மூளையின் பல்வேறு பகுதிகளை தூண்டுவதற்கும், அமைதிப்படுத்துவதற்கும் இசை உதவும்’ என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

குழந்தைகளின் கவனிக்கும் திறனை அதிகரிக்க இசை உதவும். அதனால் அவர் களுக்கு பிடித்தமான இசைக் கருவிகளை வாசிப்பதற்கு ஊக்குவிக்கலாம். இசையை கேட்டும் ரசிக்கவைக்கலாம்.
Tags:    

Similar News