செய்திகள்
போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காட்சி

பட்ஜெட் நாளில் பாராளுமன்றத்தை நோக்கிய பேரணி ரத்து -விவசாய சங்கங்கள் அறிவிப்பு

Published On 2021-01-28 03:18 GMT   |   Update On 2021-01-28 03:18 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, பட்ஜெட் நாளில் பாராளுமன்றதை நோக்கி நடத்தவிருந்த பேரணியை விவசாய சங்கங்கள் ரத்து செய்துள்ளன.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் உச்சகட்டமாக குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. டிராக்டர் பேரணியின்போது, விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிய ஒரு குழுவினர் தடையை மீறி செங்கோட்டைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். செங்கோட்டையில் தங்கள் அமைப்பின் கொடியையும் ஏற்றினர். வன்முறைகளில் 400க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த வன்முறைகள் தொடர்பாக பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் மீது 25 வழக்குகளை பதிவு செய்துள்ளது டெல்லி காவல்துறை. வன்முறை தொடர்பாக 19 பேரை கைது செய்துள்ளது. விவசாய சங்க நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்ததால் விவசாய சங்க நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்து பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலின்போது பாராளுமன்றத்தை நோக்கி நடத்தவிருந்த பேரணியை விவசாய சங்கங்கள் ரத்து  செய்துள்ளன. 

அதேசமயம் போராட்டத்தை தொடரப்போவதாக விவசாய சங்கங்கள் கூறி உள்ளன. மகாத்மா காந்தி நினைவு நாளான 30ம் தேதி நாடு முழுவதும் அமைதியான முறையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளன. 

விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்த பின்னர், போராட்டத்தில் இருந்து இரண்டு விவசாய சங்கங்கள் விலகியது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News