லைஃப்ஸ்டைல்
உடல் எடை அதிகம் கொண்டவர்கள் தங்கள் உடையில் கவனம் செலுத்துவது அவசியம்

உடல் எடை அதிகம் கொண்டவர்கள் தங்கள் உடையில் கவனம் செலுத்துவது அவசியம்

Published On 2021-07-31 06:24 GMT   |   Update On 2021-07-31 06:24 GMT
உடல் முழுவதும் ஒரே வண்ணத்திலான உடையை குண்டானவர்கள் அணிவது நல்லது. பல்வேறு வகையான நிறங்களும், பலவிதமான டிசைன்களும் குண்டானவர்களுக்கு ஏற்றதல்ல.
உடல் எடை அதிகம் கொண்டவர்கள் தங்கள் உடையில் கவனம் செலுத்துவது அவசியம். அவர்கள் பொருத்தமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சவுகரியமாகவும் இருக்கும். அதிக இறுக்கம் கொண்ட ‘பிகர் ஹக்கிங் டிரஸ்’ வகைகள் அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்காது. அதற்கு பதிலாக அதிக தளதள உடைகளை அணிவதும் சரியல்ல. இரண்டு நிலைக்கும் பொதுவான உடைகள் அவர் களுக்கு ஏற்றது. அவர்கள் உள்ளாடைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அவை சரியாக பொருந்தவேண்டும். சுகாதாரமானதாகவும், தரமானதாகவும் அவை இருக்கவேண்டும். உள்ளாடை தேர்வு சரியாக இல்லாவிட்டால் ஒட்டுமொத்த உடை அலங்காரமும் சொதப்பிவிடும்.

உடல் முழுவதும் ஒரே வண்ணத்திலான உடையை குண்டானவர்கள் அணிவது நல்லது. ஒவ்வொரு பகுதி ஆடையும் வெவ்வேறு நிறத்தில் இருப்பது நல்லதல்ல. பல்வேறு வகையான நிறங்களும், பலவிதமான டிசைன்களும் குண்டானவர்களுக்கு ஏற்றதல்ல. அடர்த்தியான நிறம் அவர்களுக்கு ஏற்றது. சிலருக்கு உடலின் மேல்பாகமும், கீழ் பாகமும் மட்டும் குண்டாக இருக்கும். இடைப்பகுதி ஒல்லியாக காணப்படும். அப்படிப்பட்டவர்கள் ஒல்லியான பகுதியில் இறுக்கமான உடைகளை அணியலாம். அப்போது குண்டாக இருக்கும் பகுதியில் அணியும் ஆடையும் இறுக்கமாக, பொருத்தமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும்.

சிலர் நமது உடல்தான் குண்டாக இருக்கிறதே நமக்கு எதற்கு மேக்கப் என்று நினைப்பார்கள். அப்படி நினைக்காமல் அவர்களும் தேவையான அளவு மேக்கப் போட்டுக்கொள்ளவேண்டு்ம். மேக்கப் இல்லாத இருண்ட முகம், உடல் எடையை கூட்டிக்காட்டும்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் நீள கூந்தலை கொண்டிருப்பது நல்லது. தோள் அளவுக்கு குட்டையாக முடியை வெட்டிவிட்டிருந்தால் அது முகத்தை கூடுதல் குண்டாக காட்டும். முகம் குண்டாக இருப்பவர்களும், கன்னங்கள் தடிமனாக இருப்பவர்களும் கூந்தலை ஸ்ரெயிட்டனிங் செய்யக்கூடாது. லேயர்களாக்கி கூந்தலை வெட்டி முகத்திற்கு அழகு தரும் விதத்தில் அலங்காரம் செய்யவேண்டும்.

குண்டானவர்கள் ஜீன்ஸ் அணிந்தால், இறுக்கமான டாப் அணிவதை தவிர்க்கலாம். மெல்லிய மெட்டீரியலில் தயாரான கம்பர்ட் பிட் டாப் அணிந்தால், உடல் குண்டாகத் தோன்றாது. குர்தாவுடன் கூடிய லெகின்ஸ் அணிவதை தவிர்த்துவிடலாம். அது தடிமனான தொடைப் பகுதியை கூடுதலாக்கிக் காட்டிவிடு்ம்.

குண்டான உடலைக் கொண்டவர்கள் கனம் குறைந்த புடவைகளை தேர்ந்தெடுத்து உடுத்தவேண்டும். பெரிய பார்டரும், லாங் ஸ்லீவ் காண்ட்ராஸ்ட் ஜாக்கெட்டும் அவர்களுக்கு பொருந்தாது.

ஒகாயோ ஸ்டேட் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வு ஒன்றில் ‘கணவரோடு சண்டைபோடும் பெண்களுக்கு எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்று கண்டறிந்திருக்கிறார்கள். கணவரோடு சந்தோஷமாக இருக்கும்போது அவர்கள் உடலில் ஜீரண பணிகள் நன்றாக நடப்பதாகவும், கணவரோடு சண்டையிடும்போது ஜீரண சக்தி குறைவதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். ஜீரண சக்தி குறையும்போது உடல் குண்டாகிவிடுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதுபோல் மனஅழுத்தமும் உடலை குண்டாக்கும். ஆகவே உடல் எடையை குறைக்க மகிழ்ச்சி மிக அவசியம்.
Tags:    

Similar News