செய்திகள்
வன்முறை நடைபெற்ற காட்சி.

டெல்லி கலவர பலி 53 ஆக உயர்வு

Published On 2020-03-06 07:45 GMT   |   Update On 2020-03-06 07:45 GMT
டெல்லி கலவரத்தில் ஏற்கனவே 48 பேர் பலியாகி இருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் டெல்லி வன்முறை சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் பெரும் கலவரமானது. வீடுகள், வாகனங்கள், கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

வணிக வளாகங்கள், மோட்டார்சைக்கிள்கள் கடுமையாக சேதம் அடைந்தன. இந்த கலவர சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

டெல்லி கலவரத்தில் ஏற்கனவே 48 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் டெல்லி வன்முறை சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

ஜி.டி.பி. மருத்துவமனையில் 44 பேரும், ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் 5 பேரும், ஜக்பிரவேஸ் சந்திரா மருத்துவமனையில் 3 பேரும், லோக்நாயக் ஜெயபிரகாஷ் ஆஸ்பத்திரியில் ஒருவரும் இறந்துள்ளனர். இந்த தகவலை மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலவரத்தில் காயம் அடைந்தவர்களில் 298 பேருக்கு ஜி.டி.பி. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 100 பேர் துப்பாக்கி குண்டில் காயம் அடைந்தவர்கள் ஆவர்.

இந்த கலவரம் தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைதாகி உள்ளனர்.

இதற்கிடையே டெல்லி கலவரம் தொடர்பாக 2 புதிய வீடியோக்கள் வெளியாகி உள்ளது. கலவரக்கும்பல் போலீசாரை தாக்குவது போன்ற ஒரு வீடியோ வந்துள்ளது.

மற்றொரு வீடியோவில் ஆஸ்பத்திரியின் மேல்புற பகுதியில் இருந்து ஒரு கும்பல் துப்பாக்கியால் சுடுவதும், பாட்டில்கள் வீசுவதும் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ தொடர்பாக போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News