ஆன்மிகம்
இயேசு

இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் கடவுள் சார்ந்தவை, மனிதர் சார்ந்தவை

Published On 2021-05-14 07:51 GMT   |   Update On 2021-05-14 07:51 GMT
கடவுளின் நீதி, இரக்கம், அன்பு ஆகியவை பற்றியும் இயேசு கற்பித்தார். உலகின் முடிவில் மக்கள் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கும் அரசராக தாம் வரவிருப்பதாகவும் இயேசு கூறியிருக்கிறார்.
இயேசு கிறிஸ்து தமது பணி வாழ்வில் பல்வேறு காரியங்கள் குறித்து கற்பித்ததாக விவிலியம் குறிப்பிடுகிறது. இயேசு வழங்கிய போதனைகளை கடவுள் சார்ந்தவை, மனிதர் சார்ந்தவை என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.

கடவுள் சார்ந்தவை

இயேசுவின் போதனைகள் விண்ணரசு அல்லது இறையாட்சியை மையப்படுத்தியதாக இருந்தன. தமது அதிகாரம் குறித்து விளக்கும் இயேசு, தம்மை இறைமகன் என்றும் விண்ணகத் தந்தையால் அனுப்பப்பட்டவர் என்றும் கூறுகிறார். தந்தையும் மகனும் ஒன்றித்து இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து தூய ஆவியார் புறப்படுகிறார் என்றும் இயேசு போதித்தார். இவ்வாறு, தந்தை, மகன், தூய ஆவியாருக்கு இடையில் நிலவும் உறவை எடுத்துரைக்கும் இயேசு, கடவுள் ஒருவரே என்றும் போதித்ததால் ஒரே கடவுளில் மூன்று ஆட்கள் இருக்கின்றனர் என்று நாம் நம்புகிறோம். மேலும், கடவுளின் நீதி, இரக்கம், அன்பு ஆகியவை பற்றியும் இயேசு கற்பித்தார். உலகின் முடிவில் மக்கள் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கும் அரசராக தாம் வரவிருப்பதாகவும் இயேசு கூறியிருக்கிறார்.

"காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்."

மனிதர் சார்ந்தவை

மனிதர்கள், கடவுளையும் பிறரையும் அன்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய இயேசு, அனைவரும் தம்மைப் போல் பிறரை அன்பு செய்யுமாறு வலியுறுத்தினார். பிறரைத் தீர்ப்பிட வேண்டாம் என்றும், பகைவரையும் அன்பு செய்ய வேண்டும் என்றும் அவர் போதித்தார். உடல் இச்சையை விலக்க வேண்டும் என்றும், திருமண உறவை முறிக்கக் கூடாது என்றும் அவர் கற்பித்தார். கடவுளை நம்பி வாழ வேண்டும் என்றும், உலகப் பொருட்கள் மீது பற்று வைக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். உலகின் முடிவில் இறந்தோர் அனைவரும் உயிர்த்தெழுவர் என்றும், அப்போது ஒவ்வொருவரும் அவரவர் செயலுக்கு ஏற்ப நிலை வாழ்வையோ தண்டனையையோ பெறுவர் என்றும் இயேசு கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News