செய்திகள்
வைகோ

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பாடத் திட்டத்தை மாற்றியதால் தமிழர்கள் வேலைவாய்ப்பு பறிபோகும்- வைகோ

Published On 2019-09-28 08:42 GMT   |   Update On 2019-09-28 08:42 GMT
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பாடத் திட்டத்தை மாற்றியதால் தமிழர்கள் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதால் புதிய பாடத்திட்டத் தேர்வு முறையை திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்-2) பணிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று கட்டங்களில் தேர்வு நடத்துகிறது.

முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவை இடம்பெறும். முதன்மைத் தேர்வில் பட்டப்படிப்புத் தரத்தில் பொது அறிவுப் பகுதி கேள்விகள் மட்டும் வினா விடை பாணியில் இடம்பெறும்.

இதில் முதல் நிலைத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். அவற்றில் 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் என்று மொழிப் பாடத்திலும், மீதமுள்ள 100 கேள்விகள் பொது அறிவு பாடத்திட்டமாகவும் இருந்து வந்தது. இந்நிலையில் பாட திட்டங்கள் மாற்றப்படுவதாக, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் எழுதும் குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மொழித்தாள் திட்டமிட்டு நீக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், முதல்நிலைத் தேர்வில் தமிழ் பாடத்தை நீக்கி இருப்பதன் மூலம் தமிழே தெரியாமல் ஒருவர் மாநில அரசு பணியில் சேருவதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் வேலை இல்லை. ஆனால் பிற மாநிலத்தவர்களும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி அரசுப் பணியில் சேர எடப்பாடி பழனிசாமி அரசு, டி.என்.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தையே மாற்றி அமைத்து, தமிழ்நாடு இளைஞர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்து இருப்பது மன்னிக்கவே முடியாத செயல் ஆகும்.

2016-ம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், அ.திமு.க. அரசு, தமிழக சட்டமன்றத்தில், அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் கொண்டுவந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணைய விதிகளில் திருத்தம் செய்தது.

இதன்படி 7.11.2016 இல் பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை, தமிழக அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பணியில் சேரலாம் என்று தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் உதவி மின் பொறியாளர்கள் 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 36 பேர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு டெல்லி பா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதால், அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை நுழைக்க டி.என்.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தையே மாற்றி அமைக்க முனைந்துள்ளது. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். உடனடியாக டி.என்.பி.எஸ்.சி. புதிய பாடத்திட்டத் தேர்வு முறையை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
Tags:    

Similar News