உள்ளூர் செய்திகள்
கோவை பூமார்க்கெட்டில் கரும்பு விற்பனை

கோவையில் களைகட்டிய பொங்கல் பண்டிகை- கரும்பு, மஞ்சள் விற்பனை ஜோர்

Published On 2022-01-12 11:17 GMT   |   Update On 2022-01-12 11:17 GMT
பொங்கல் பண்டிகையொட்டி கோவை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குவிந்தது.
கோவை:

தமிழர்களின் திருவிழாவான தைப்பொங்கல் நாளை மறுநாள்(14-ந்  தேதி) கொண்டாடப்பட உள்ளது. பொங்கலை கொண்டாட மக்கள் தயாரகி வருகிறார்கள். இப்போதே கோவையில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அங்கு கரும்பு, பானை, மஞ்சள் கொத்து, பூளைப்பூ, ஆவாரம்பூ, பனங்கிழங்கு, அரிசி, வெல்லம், காய்கறிகள், பழங்கள் உள்பட பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி செல்கின்றனர்.

கோவையில் உக்கடம், ஆர்.எஸ்.புரம் பூ மார்கெட், சாய்பாபா காலனி மார்கெட், தியாகி குமரன் மார்க்கெட், எம்ஜிஆர் மார்க்கெட் ஆகிய இடங்களில் பொங்கல் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. இங்கு பொங்கல் பானைகள் குறைந்தபட்சம் ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. செங்கரும்பு ஜோடி, ரூ.80 முதல் ரூ.100 வரையும், மஞ்சள் கொத்து ரூ.40 முதல் ரூ.60 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
 
மேலும்  வெல்லம் கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோல் தக்காளி, கத்தரிக்காய், சேனை கிழங்கு, பீன்ஸ், கேரட், வெண்டை, உருளை, பீட்ரூட் உள்பட அனைத்து வகை காய்கறிகளும் வாங்கி செல்கிறார்கள்.

பூக்கள் விற்பனையும் மார்க்கெட்டுகளில் வேகமாக நடந்து வருகிறது.  இன்று மட்டும் 5 டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தேவையான துளசி, பூளைப்பூ, ஆவாரம் பூ, வேப்பிலை, மாவிலை ஆகியவை சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருகிறது. ஒரு கட்டு 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதுதவிர செவ்வந்தி 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையும், அரளிப்பூ 300 ரூபாய் வரையிலும், மல்லிகை 2000 ரூபாய்க்கும், முல்லை 1,600 ரூபாய்க்கு, சம்பங்கி 120 ரூபாய்க்கும், ரோஸ் கட்டு 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இதேபோல் பூஜைக்கு தேவையான தேங்காய், பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கோவை பூ மார்க்கெட்டில் கரும்பு மற்றும் மஞ்சள்கடை வைத்துள்ள வியாபாரி  கிருஷ்ணன்கூறியதாவது:- 

பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்களுக்கு முன்பாக கரும்பு மற்றும் மஞ்சள் கடைகளை கோவையில் பல்வேறு இடங்களில் அமைப்போம். கரும்பு ஜோடி 80 முதல் 100 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்து வருகிறோம். அதேபோல தரமான பெரிய மஞ்சள் 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறோம். 

கொரோனா காரணமாக வியாபாரம் சரிவர நடைபெறவில்லை. கடந்த வருடம் இந்நேரம் எல்லாம் எங்களால் பொருள்களை எடுத்து கொடுக்க முடியாத  அளவிற்கு கூட்டம் நிரம்பியது. ஆனால் இந்த வருடம் பொதுமக்கள் வெளியே வரவே பயப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பூ மார்க்கெட்டில் கடை அமைத்துள்ள வியாபாரி தாமரை சீனிவாசன் கூறியதாவது:- 

நான் 40 வருடங்களாக பூஜைப் பொருட்களான தேங்காய், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வருகிறேன். பொங்கல் பண்டிகைக்காக தற்போது மார்க்கெட்டில் தற்காலிக கடை அமைத்துள்ளோம். 
கோவையில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் விளைச்சல் செய்யப் படுகிறது. அங்கிருந்து கொள் முதல் செய்து கோவையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்கிறோம். 

வீட்டில் பொங்கல் வைக்கும் போது பொங்கல் பானையில் மஞ்சள் வைப்பதால் அதில் இருந்து வரும் புகை மஞ்சள் மீது பட்டு செல்வதால் பெண்களுக்கு உடல் ரீதியான சக்தியாகவும், மருத்துவ குணமிக்கதாக உள்ளது. கொரோனா காரணமாக கடந்த வருடத்தை விட 50 சதவீதம் மக்கள் மட்டுமே தற்போது வருகை புரிகின்றனர்.  மஞ்சள் குலை 15 பீஸ் 250 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை மொத்த கொள்முதல் செய்து இங்கு வந்து விற்பனை செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News