ஆன்மிகம்

விஷ்ணு எடுத்த பெண் அவதாரம்

Published On 2019-06-21 08:36 GMT   |   Update On 2019-06-21 08:36 GMT
மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு பெண் வடிவமாக எடுத்த அவதாரமே ‘மோகினி.’ இந்த அவதாரத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அதில் பெண் வடிவமாக எடுத்த அவதாரமே ‘மோகினி.’ தன் அழகால் பிறரை மயக்கும் தன்மை கொண்டவள். திருப்பாற்கடலைக் கடைந்ததன் பலனாக அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது.

அதனை பங்கிட்டுக் கொள்வதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். பின்னர் அசுரர்களை தன்னுடைய அழகால் மயக்கி, தானே அமிர்தத்தை பங்கிட்டுக் கொடுப்பதாக கூறினாள். முதலில் தேவர்களுக்கு அமிர்தத்தை அளிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தேவர்களுக்கு மோகினி அமிர்தத்தை வழங்கினாள். ஆனால் தாங்கள் ஏமாற்றப்பட இருக்கிறோம் என்பதை உணர்ந்த ஒரு அசுரன், தேவர்கள் போல் வேடம் தரித்து தேவர்களின் வரிசையில் வந்து அமர்ந்தான். அவனுக்கும் மோகினி அமிர்தத்தை வழங்கினாள். அவன் அதை அருந்தும் வேளையில் சூரியனும், சந்திரனும் அவனை அசுரன் என்று அடையாளம் காட்டினர்.

உடனே மோகினி தன்னுடைய கையில் இருந்த கரண்டியைக் கொண்டு அந்த அசுரனின் கழுத்தை வெட்டினாள். அமிர்தம் அருந்திய காரணத்தால் அவனது உயிர் பிரியவில்லை. தலையும், உடலும் வேறுவேறாக மாறியிருந்த அவனை ராகு, கேதுவாக மாற்றி நவக்கிரகங்களில் முக்கியமானவர்களாக மாற்றினார் சிவபெருமான்.

மோகினியின் உருவத்தைக் கண்ட சிவபெருமான், அவளது அழகின் மயங்கியதன் பேரில் ஐயப்பன் அவதரித்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News