செய்திகள்
வெடி விபத்தில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து கிடப்பதை காணலாம்

காரில் இருந்த வாண வெடிகள் வெடித்து 70 வீடுகள் சேதம்- போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை

Published On 2021-09-21 07:22 GMT   |   Update On 2021-09-21 07:22 GMT
சாத்தான்குளம் அருகே இன்று அதிகாலை காரில் இருந்த வாண வெடிகள் ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 30 நிமிடம் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.
சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை அடுத்த இடைச்சிவிளை பகுதியை சேர்ந்த குமரன்விளை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 45).

இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அணைக்கரையில் அரசு அனுமதியுடன் வாணவெடிகள் தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். திருமண வீடு, கோவில் திருவிழா மற்றும் விசே‌ஷ நிகழ்ச்சிகளுக்கு வெடிகளை சப்ளை செய்வார்.

இன்று சாத்தான்குளம் பகுதியில் உள்ள 2 விசே‌ஷ வீடுகளுக்கு வாணவெடிகள் சப்ளை செய்வதற்காக தனது காரில் ஏராளமான வாணவெடிகளை அடுக்கி வைத்திருந்தார். நேற்று இரவு அந்த காரை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென்று அந்த கார் தீப்பிடித்தது. அப்போது காரில் இருந்த வெடிகள் வெடித்து சிதறியது. காரில் ஏராளமான வெடிகள் இருந்ததால் ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 30 நிமிடம் பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடித்தன.

அப்போது வாணவெடிகள் காரில் இருந்து சீறிப்பாய்ந்து அருகில் உள்ள வீடுகள் மீதும் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் உள்ள பல வீடுகளின் ஓடுகள், கண்ணாடிகள், சுவர்கள், ஜன்னல்கள் சேதடைந்தன.

மொத்தம் 70 வீடுகள் வரை சேதமடைந்ததாக கூறப்படுகிறது. வெடிகள் வெடித்த சத்தம் பெரிய குண்டு வெடிப்பு போல் நிகழ்ந்தது. அந்த பகுதியில் உள்ள வீடுகளும் நில அதிர்வுகள் ஏற்பட்டது போல அதிர்ந்தன.

இதனால் வீடுகளில் உள்ள பொதுமக்கள் அலறியடித்து வெளியே வந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு வாணவெடிகள் வெடித்த விபரம் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு திசையன்விளை தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, வீடுகளில் தீப்பிடிக்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். தீப்பிடித்து எரிந்த காரையும் அணைத்தனர். இதில் அந்த கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது.



பயங்கர வெடி விபத்து பற்றி தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சாத்தான்குளம் டி.எஸ்.பி.கண்ணன் ஆகியோரும் இன்று காலை நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த வெடிவிபத்தில் அந்த பகுதியை சேர்ந்த 3 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக பொதுமக்களுக்கு பெரிய காயங்களோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யாரேனும் வேண்டும் என்றே காரில் தீ வைத்தார்களா அல்லது அதிக வெப்பம் காரணமாக கார் தீப்பிடித்து எரிந்ததா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

வாணவெடிகள் தயாரித்த உரிமையாளரான பாலகிருஷ்ணனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இன்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News