செய்திகள்
கைது

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக சகோதரர்கள் கைது

Published On 2021-08-06 04:13 GMT   |   Update On 2021-08-06 04:13 GMT
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக தொழிலதிபர்களான சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:

திருவாரூர் மாவட்டம் மறையூரைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ் (வயது 50), சுவாமிநாதன்(47). இவர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் வசித்து வருகின்றனர். ஹெலிகாப்டர் வைத்து உள்ளதால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் இவர்கள் நிதிநிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா-பைரோஸ் பானு தம்பதியினர், கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள், ரூ.15 கோடி வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நிதி நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் ஸ்ரீகாந்த், கணக்காளர் மீரா(30) உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கணேஷ் சகோதரர்கள் பயன்படுத்தி வந்த 12 சொகுசு கார்களையும் போலீசார் கடந்த வாரம் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக இருந்த கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் புதுக்கோட்டையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படையினர் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டிக்கு சென்றனர். அப்போது அங்கு சகோதரர்கள் இருவரும் தங்களது நண்பரான ஸ்ரீதர் என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் தஞ்சைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் இருவரையும் இரவு கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags:    

Similar News