செய்திகள்
பாளையில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக அரசு உடனடியாக பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்- டிடிவி தினகரன் பேட்டி

Published On 2019-08-20 12:51 GMT   |   Update On 2019-08-20 13:35 GMT
பால் விலை உயர்வு ஏற்கக்கூடியது அல்ல. உடனடியாக பால்விலை உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று தினகரன் கூறியுள்ளார்.

நெல்லை:

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்துள்ளேன். ஏற்கனவே கடந்த முறை நாங்கள் மாலை அணிவித்ததால் இந்த ஆண்டு சிலர் புதிதாக வந்துள்ளனர். அ.ம.மு.க. கட்சியை பதிவு செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாலும், நிரந்தரமாக சின்னம் கேட்டு அதை பெறுவதில் கால அவகாசம் தேவைப்படுவதாலும் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை.

தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு முன்பாக இந்த பணிகள் முடிந்து விட்டால் தேர்தலில் போட்டியிடுவோம். பால் விலை உயர்வு ஏற்கக்கூடியது அல்ல. இது ஏழை மக்களை பாதிக்கக் கூடியது. உடனடியாக பால்விலை உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரும் வரும் என்று காலம் தாழ்த்தி வருகிறார்கள். தற்போது கோர்ட்டில் அக்டோபர் மாதம் அறிவிப்பதாக கூறியுள்ளனர். எனவே அதுவரை பொறுத் திருந்து பார்க்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் அ.ம.மு.க.வில் இருந்து ஒருசிலர் தான் சுயநலத்திற் காக கட்சி மாறியுள்ளனர். தொண்டர்களும், ஏராளமான நிர்வாகிகளும் அப்படியே உள்ளனர். இன்று வந்துள்ள கூட்டத்தை பார்த்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

தற்போது மாவட்டத்தை பிரித்து வருகிறார்கள். மக்கள் விருப்பத்திற்கேற்ப மாவட்டத்தை பிரிப்பதால் அந்த மக்களுக்கு வளர்ச்சி ஏற்படும். எனவே மாவட்டத்தை பிரிப்பது தவறில்லை. லஞ்சம், ஊழலை மறைக்க மாவட்டத்தை பிரிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருந்தால் அது பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போலதான்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News