செய்திகள்
தாலி

‘நீட்’ தேர்வு எழுத சென்ற புதுப்பெண்ணிடம் தாலியை கழற்றுமாறு கூறிய அதிகாரிகளால் பரபரப்பு

Published On 2020-09-14 02:19 GMT   |   Update On 2020-09-14 02:19 GMT
நீட் தேர்வு எழுதுவதற்காக புதுப்பெண்ணின் தாலியை கழற்றுமாறு அதிகாரிகள் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகி 4 மாதம் ஆன புதுப்பெண் ஒருவர் ‘நீட்’ தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக பாளையங்கோட்டையில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுதுவதற்காக அந்த பெண் நேற்று தனது உறவினர்களுடன் பாளையங்கோட்டைக்கு வந்தார். அப்போது தேர்வு மையத்துக்குள் தாலி உள்ளிட்ட எந்தவொரு நகைகளும் அணிந்து செல்லக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து அந்த புதுப்பெண் தனது தலையில் இருந்த பூக்களை ஹேர்பின்னுடன் கழற்றி உறவினர்களிடம் கொடுத்தார். தொடர்ந்து அவர் கழுத்தில் அணிந்து இருந்த தாலி, காலில் அணிந்து இருந்த மெட்டி உள்ளிட்ட நகைகளையும் கழற்றி உறவினர்களிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றார். மாலையில் தேர்வு எழுதி விட்டு வந்த பின்னர் அவர் மீண்டும் தனது தாலி, மெட்டி உள்ளிட்ட நகைகளை அணிந்து சென்றார்.

நீட் தேர்வு எழுதுவதற்காக புதுப்பெண்ணின் தாலியை கழற்றுமாறு அதிகாரிகள் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News