செய்திகள்
வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் மன்சூர் அலிகான் வாக்குவாதம்

Published On 2021-04-06 06:51 GMT   |   Update On 2021-04-06 07:48 GMT
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.
கோவை:

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொகுதியிலேயே முகாமிட்டு வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

வாக்குப்பதிவு நாளான இன்று தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் ரைஸ்மில் ரோடு பகுதியில் உள்ள வாக்கு சாவடி மையத்திற்கு சென்றார்.

அங்கு வாக்காளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அதிகாரிகளிடம் இதுவரை எத்தனை வாக்குகள் பதிவாகி உள்ளளது என கேட்டார்.

தொடர்ந்து வாக்கு சாவடி மையத்தை பார்வையிட்ட அவர், ஏன் இந்த வாக்குச்சாவடி இவ்வளவு இருட்டாக உள்ளது.


இப்படி இருந்தால் மக்களுக்கு எப்படி சின்னம் தெரியும், அவர்கள் எப்படி வாக்களிப்பார்கள். அவர்களுக்கு முதலில் உள்ள சின்னங்கள் மட்டும் தானே தெரியும். மற்ற சின்னங்கள் தெரியாது. உடனடியாக இந்த இடத்தில் லைட் மாட்டுங்கள் என கூறி அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டார்.

அதற்கு அதிகாரிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் அருகே சென்சார் கருவி உள்ளது. இங்கு லைட் மாட்டினால் வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பது மற்றவர்களுக்கு தெரிந்து விடும் என்றனர். ஆனாலும் அவர் தொடர்ந்து அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டார். அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், நான் தொண்டாமுத்தூர் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன். வெற்றி பெற்று வந்து மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நான் நிறைவேற்றி கொடுப்பேன் என்றார்.
Tags:    

Similar News