செய்திகள்
பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

உயிரை மாய்க்கும் செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

Published On 2021-09-12 08:32 GMT   |   Update On 2021-09-12 08:32 GMT
குறுகிய காலம் இருந்ததால் இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நெல்லை:

நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6 லட்சத்து 12 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டது. இதுவே இதுவரை சாதனையாக உள்ளது.

அதை மிஞ்சும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் 20 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 959 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 62,650 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் இன்று 58,608 பேருக்கு இன்று தடுப்பூசி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாறுபட்ட வைரஸ் தொற்றை உறுதி செய்ய இந்தியாவில் பெங்களூரு உள்பட 23 இடங்களில் மரபியல் அணு ஆய்வகம் உள்ளது.

தமிழகத்தில் மாறுபட்ட வைரசால் 10 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். அவரின் மரபணுக்கள் பரிசோதனைக்காக பெங்களூரில் உள்ள “இன்ஸ்டம்” ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒரு மாதிரிக்கு ரூ.4 ஆயிரம் செலவு ஆவதுடன் முடிவு தெரிவதற்கு மாதக்கணக்கில் ஆகிறது. எனவே தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 தொழில் நுட்ப ஆய்வாளர்களை பெங்களூரு ஆய்வகத்திற்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பயிற்சி முடிந்து திரும்பி வந்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக கூடுதல் வசதிகளுடன் ரூ.4 கோடி மதிப்பில் சென்னை, டி.எம்.எஸ்.வளாகத்தில் புதிதாக மரபியல் அணு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் அதனை முதல்- அமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

இந்த ஆய்வகம் மூலம் டெல்டா பிளஸ் உள்ளிட்ட மாறுபட்ட வைரஸ் தொற்று குறித்து ஓரிரு நாளில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


அப்போது நிருபர்கள் சேலத்தில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன் இதுபோன்ற நிலைகள் வரவே கூடாது என்று எண்ணிதான் பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வுக்கு எதிராக முதல் சட்டமன்ற கூட்ட தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.

தி.மு.க. அரசு மாணவர்களின் நலன் காக்கும் அரசு. எனவே மாணவர்கள் மனம் தளரக்கூடாது. அவர்கள் தவறாக, உயிர்களை மாய்க்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. குறுகிய காலம் இருந்ததால் இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற முதல்-அமைச்சர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் என்றார்.



Tags:    

Similar News