செய்திகள்
சித்தராமையா

இடைத்தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

Published On 2019-12-09 02:25 GMT   |   Update On 2019-12-09 02:25 GMT
இடைத்தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சரக்கு-சேவை வரி திட்டம் மூலம் இழப்பீடாக மத்திய அரசு கர்நாடகத்திற்கு ரூ.5,600 கோடி வழங்க வேண்டும். இந்த நிதியை பெற எடியூரப்பா டெல்லிக்கு சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த நிதியை மத்திய அரசு வழங்குகிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த நிதியை மத்திய அரசு விடுவிக்காவிட்டால், கர்நாடகத்தின் நிலை மோசமான நிலைக்கு சென்றுவிடும்.

காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவதாக கூறியவர்கள் சோர்வடைந்துவிட்டனர். இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். கருத்து கணிப்புகளின்படி தேர்தல் முடிவு இருக்காது. அவற்றின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இடைத்தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெறும்.

ஓட்டுப்பதிவு ரகசியமாக நடைபெறும். கருத்து கணிப்பு நடத்துபவர்கள், ஒரு சிலரிடம் கருத்து கேட்டு முடிவை வெளியிடுகிறார்கள். இடைத்தேர்தல் முடிவுகள் நாளை(அதாவது இன்று) வெளியாகிறது. யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது தெரிந்துவிடும். அதுவரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மாநில அரசு மறந்துவிட்டது.

மாநில அரசின் கருவூலத்தில் பணம் இல்லை. பொருளாதார சிக்கல் இருக்கிறது. மக்களின் கவனத்தை திசை திருப்ப வேறு விஷயங்கள் குறித்து பா.ஜனதாவினர் பேசுகிறார்கள். என்னை இலக்காக கொண்டு பா.ஜனதாவினர் விமர்சிக்கிறார்கள். என்னை பார்த்தால் அவர்களுக்கு பயம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News