செய்திகள்
மந்திரி சுதாகர்

கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி: சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்

Published On 2020-10-13 02:19 GMT   |   Update On 2020-10-13 02:19 GMT
கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்வேன் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
மைசூரு :

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மருத்துவ கல்வியுடன் சுகாதாரத்துறையை சேர்த்து நிர்வகித்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும்படி முதல்-மந்திரி எனக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார். என் மீது அவர் வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்வேன். மேலும் கொரோனா மரண விகிதத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வி ஆகிய 2 துறைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. பல்வேறு காரணங்களுக்காக அந்த துறைகள் கடந்த 2000-ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. அந்த தவறு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று சட்டசபை கூட்டத்தில் தெளிவுபடுத்தினேன். எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் தொடர் கேள்விகளை அடுத்து, மீண்டும் ஒரு முறை அந்த கொள்முதல் குறித்து ஆய்வு செய்வேன்.

சுகாதாரத்துறை எனக்கு ஒதுக்கப்பட்ட பிறகு மந்திரி ஸ்ரீராமுலுவிடம் பேசினேன். அவருக்கு எந்த அதிருப்தியும் இல்லை. சமூக நலத்துறை பெரிய இலாகா ஆகும். அந்த துறையின் ஆண்டு நிதி ஒதுக்கீடு ரூ.25 ஆயிரம் கோடி. கடந்த காலத்திலும் அந்த துறை மீது ஸ்ரீராமுலு ஆர்வம் கொண்டிருந்தார்.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News