செய்திகள்
தூத்துக்குடியில் மீண்டும் மழை

தேங்கிய தண்ணீர் வடியாமல் தீவாக மாறிய நிலையில் தூத்துக்குடியில் மீண்டும் மழை

Published On 2021-01-22 08:06 GMT   |   Update On 2021-01-22 08:06 GMT
தூத்துக்குடியில் தேங்கிய தண்ணீர் வடியாத நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

கடந்த ஒரு வாரமாக மழை நின்று வெயில் அடித்தது. இதனால் வெள்ளநீரை வடிய வைக்க மாநகராட்சி சார்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்களை வைத்து நீரை வெளியேற்றும் பணி நடந்தது. சில இடங்களில் தற்காலிக கால்வாய்கள் அமைத்தும் தண்ணீரை வெளியேற்றினர். எனினும் மழைநீர் வடிந்தபாடில்லை.

குறிப்பாக முத்தம்மாள் காலனி, ராம்நகர், ரகுமத்நகர், குறிஞ்சிநகர், தனசேகர்நகர், ஸ்டேட்பாங்க் காலனி, ஆதிபராசக்திநகர், ராஜசேகர்நகர், பாரதிநகர், ராஜூவ்நகர், பிரைண்ட்நகர், அமுதாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளை வெள்ளநீர் முட்டளவு சூழ்ந்துள்ளது.

இப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளதால் இந்த குடியிருப்புகள் தீவு போன்று மாறி உள்ளது. குடிருப்புகளை சுற்றி பல நாட்கள் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதில் சில இடங்களில் வெள்ளநீருடன், சாக்கடை நீரும் கலந்து உள்ளதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும், தேங்கிய தண்ணீரில் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மழை நின்றும் தண்ணீர் வடியாததால் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபட முடியாமல் தவித்து வரும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஒரு வாரமாக மழை நின்றும் வெள்ளநீர் வடியாததால் மனமுடைந்த மக்கள் முத்தம்மாள் காலனியில் ஒரு பதாகையினை வைத்துள்ளனர்.

அதில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியினை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எப்போது தீரும் எங்கள் பரிதாப நிலை என்றும் எழுதி உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலையில் தூத்துக்குடி மாநகர பகுதியில் லேசான சாரல் மழை பரவலாக பெய்தது. ஏற்கனவே மழை நின்றும் வெள்ளநீர் வடியாமல் உள்ளது.

தற்போது மாநகரில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் தூத்துக்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News