செய்திகள்
இல.கணேசன்

இந்தி மொழிக்கு ஆதரவாக போராட்டம் வெடிக்கும்- இல.கணேசன் பேட்டி

Published On 2019-10-03 10:59 GMT   |   Update On 2019-10-03 10:59 GMT
தமிழகத்தில் விரைவில் இந்தி மொழிக்கு ஆதரவாக போராட்டம் வெடிக்கும் என்று கன்னியாகுமரியில் இல.கணேசன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் இன்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பாரத பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு செயல் திட்டங்கள் தீட்டி நிறைவேற்றி வருகிறார். தூய்மை பாரதம் திட்டம் மூலம் ஊராட்சிகளில் கூட கழிவறை கட்டப்பட்டு விட்டது.

தேச பிதா காந்தியின் கொள்கைகளுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என்று, காங்கிரசார் கூறியுள்ளனர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை பாரதீய ஜனதா கொண்டாடி வருகிறது. காந்தியின் கொள்கைகளுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கோவருக்கும், காந்திக்கும் தொடர்பு உண்டு. பாரதீய ஜனதாவிலும், காந்தீய சிந்தனைகள் கொண்ட தலைவர்கள் உள்ளனர்.

ஏழை மாணவர்களை கல்வியில் உயர்ந்தவர்களாக்க தொடங்கப்பட்டது, நவோதயா பள்ளிகள். தமிழகத்தில் இப்பள்ளிகள் தொடங்க அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இந்தியை திணிக்க முயல்வதாக கூறுகிறார்கள். பாரதீய ஜனதா ஒரு போதும் இந்தியை திணிக்க முயலவில்லை.

இந்திக்கு ஆதரவாக தமிழகத்தில் மக்கள் போராட்டம் விரைவில் வெடிக்கும். இந்தியை கற்றுத் தாருங்கள் என்று மக்கள் கேட்கும் காலம் விரைவில் வரும்.

அரியானா, மராட்டிய மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.


காஷ்மீர் மாநிலத்தில் வாழும் மக்கள் காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கைப்படி காஷ்மீர் மாநிலத்திற்கு, யூனியன் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு பாரதீய ஜனதா ஆதரவு அளிக்கும். இது தொடர்பாக அ.தி.மு.க. அமைச்சர்கள், பாரதீய ஜனதா மேலிட பார்வையாளர் முரளிதரராவை சந்தித்து பேசியுள்ளனர்.

நாங்குநேரியில் பாரதீய ஜனதா கட்சிக்கு தொண்டர்கள் அதிகம் உள்ளனர். இதனால் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும். இதுபோல விக்கிரவாண்டி தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளரே வெற்றி பெறுவார்.

தமிழக பாரதீய ஜனதா கட்சியில் இப்போது நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. அடுத்த மாதம் கிளை அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது.

டிசம்பர் மாதம் மண்டல அளவிலான நிர்வாகிகள் தேர்தல் நடக்க இருக்கிறது. அதன் பிறகு மாநில தலைவர் பற்றிய தகவல் தெரிய வரும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனேயே கூட்டணி தொடரும். உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாதம் நடக்கும் என்று கூறுகிறார்கள். நவம்பர் மாதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தேர்தலை டிசம்பர் மாதம் நடத்தலாம் என்பது எனது கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News