செய்திகள்
டலூரில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

மழை வெள்ள பாதிப்பு : நிவாரணம் பெறும் பயனாளிகள் பட்டியலில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

Published On 2020-12-15 18:26 GMT   |   Update On 2020-12-15 18:26 GMT
மழை வெள்ள பாதிப்பு நிவாரணம் பெறும் பயனாளிகள் பட்டியலில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்று அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்:

மழை வெள்ள பாதிப்பு மறு சீரமைப்பு மற்றும் சேத மதிப்பீட்டு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று கடலூரில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து சேதமடைந்த வீடுகள், பலியான கால்நடைகள் குறித்து விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும். பயிர் சேத மதிப்பீட்டுப் பணி வருவாய்த்துறை, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலை சார்ந்த அலுவலர்கள் கூட்டாக ஆய்வு செய்து, பயிர் சேத பாதிப்புகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். நிவாரணம் பெறும் பயனாளிகள் பட்டியல் தயார் செய்யும்போது உண்மைத்தன்மை இருக்க வேண்டும்.

பயிர் சேத கணக்கெடுப்பு பணிகளை கூடுமானவரை சம்பந்தப்பட்ட விவசாயிகள் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். தூய்மைப்படுத்தப்பட்ட பகுதிகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்து நோய் தொற்று பரவாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சுகாதாரத்துறையின் மூலம் டெங்கு கொசு பரவலை தடுக்கும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்துகளை தெளித்து, நல்ல தண்ணீர் தேங்காத வண்ணம் கண்காணித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை மூலம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் நடத்தி, கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும் கால்நடை பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு விவரங்களை விரைவாக மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும். பொதுப் பணித்துறை மூலம், கனமழையால் சேதமடைந்த சிறு பாலங்கள் உள்ளிட்டவைகளை உடனடியாக சரி செய்து, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத்துறை மூலம் பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகளை மேலும் துரிதப்படுத்தி பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், சப்-கலெக்டர்கள் மதுபாலன், பிரவின்குமார், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், துணை கலெக்டர் (பயிற்சி) ஜெயராஜபவுலின், பேரிடர் மேலாண்மை தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News