செய்திகள்
ராமதாஸ்

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

Published On 2021-10-20 06:49 GMT   |   Update On 2021-10-20 06:49 GMT
தமிழகத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை கற்றிருக்க வேண்டும் என்று ஒரு நிறுவன பிரதிநிதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப் பதாவது:-

தமிழ்நாட்டில் உணவு வினியோகிக்கும் தனியார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும்போது, இந்தி தேசிய மொழி என்பதால் அனைவரும் கொஞ்சமாவது இந்தி கற்றிருக்க வேண்டும் என்று கூறியிருப்பது பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் சேவை வழங்காதது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை கற்றிருக்க வேண்டும் என்று அந்நிறுவன பிரதிநிதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் இத்தகையக் கொடுமைகள் இனியும் நடக்கக்கூடாது என்பது தான் தமிழக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். இந்த எதிர்பார்ப்புகளை தமிழக அரசு ஒரே ஒரு சட்டத்தின் மூலம் மிகவும் எளிதாக நிறைவேற்றி விட முடியும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்றுவதன் மூலம் இச்சிக்கலை தீர்க்க முடியும்.

எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் அரசு பணிகளில் 100 விழுக்காடும், தனியார் தொழில் மற்றும் சேவை வழங்கும் நிறுவனப் பணிகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதேபோல், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தி வெற்றி பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News