செய்திகள்
சீமான் திருச்சி கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்தபோது எடுத்தபடம்.

ரஜினி நண்பர் என்பதால் மத்திய அரசு விருது வழங்கியுள்ளது- சீமான்

Published On 2019-11-04 07:01 GMT   |   Update On 2019-11-04 07:01 GMT
ரஜினியை விட சாதித்தவர்கள் இருப்பதாகவும், மத்திய பா.ஜ.க. அரசின் நண்பர் என்பதால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி திருச்சிக்கு விமானத்தில் வந்தார். அவரை வரவேற்பதற்காக அந்த கட்சியினர் திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தனர். அதேபோல் அதே விமானத்தில் வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை வரவேற்பதற்காக, அந்த கட்சியினரும் அங்கு காத்திருந்தனர்.

அப்போது இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-6 கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவரிடம் திருச்சி விமான நிலைய போலீசார், மோதல் வழக்கு தொடர்பாக இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜராவதற்கான சம்மனை வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட சீமான், தஞ்சை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

 
இந்தநிலையில் சம்மன் தொடர்பான வழக்கில் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் 14 பேர் இன்று திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-6ல் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ‌ஷகீலா சீமானிடம் குற்றப்பத்திரிகை நகலை வழங்கினார். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று மீண்டும் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது.

பின்னர் வெளியே வந்த சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக பொதுமறை தந்த திருவள்ளுவரை காவியடித்து தன்வயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. தமிழர்கள் ஒரு பண்பட்ட நாகரீகத்தை அடைந்து விட்டார்கள். அதனால் வீதியில் இறங்கி போராடுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அதையும் மீறி தமிழர்களை இழிவுப்படுத்தி அவமானப்படுத்தினால் தமிழக மக்கள் வெகுண்டு எழுவார்கள்.

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்திருப்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும். பா.ஜ.க.வை சேர்ந்த எச். ராஜா திருவள்ளுவரை இந்து புலவர் என்று சொல்கிறார்.

இந்தியநாடு என்பதும், இந்து என்ற சொல்லும் இங்கே கிடையாது. வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள். நாட்டில் உள்ள நிலம், வளம் சார்ந்த பிரச்சனைகளை கையில் எடுத்து அரசியல் செய்யுங்கள்.


ச.ம.க. தலைவர் சரத்குமார் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் கூட்டணி தர்மத்திற்காக எடப்பாடி பழனிசாமியை ஆளுமை மிக்க தலைவர் என்று கூறியிருக்கிறார். திரையுலகில் சாதித்த நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியிருப்பதை வரவேற்கிறேன். ஆனால் அவரை விட சாதித்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். கமல் 60 ஆண்டு காலம் கலை உலகில் சாதித்துள்ளார். பாரதிராஜா, இளையராஜா போன்றோர்களும் இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் மத்திய பா.ஜ.க. அரசின் நண்பர் என்பதால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News